முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வேண்டுகோள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்தை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெறும் முழுஅடைப்புப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை கதவடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், காய்கறி மண்டிகள், ஆட்டோ தொழிற்சங்கங்கள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், மாணவ, மாணவிகள், வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள், அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் மயூரா ஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, திராவிடக் கழக நிர்வாகி ஆறுச்சாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இலக்கியன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நிர்வாகி தன்பால், வடிவேல், ஆதித் தமிழர் பேரவை நிர்வாகி அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.