ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை: மகன் கைது
குடும்பத் தகராறு காரணமாக ஓய்வுபெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளரைக் கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக ஓய்வுபெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளரைக் கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவை மாவட்டம், இருகூரை அடுத்த அண்ணா நகரைச் சேர்ந்தவர் எஸ்.சுப்பிரமணியம் (70), ஓய்வுபெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர். இவரது மகன் செந்தில்குமார் (40). இவருக்கு மதுப் பழக்கம் இருந்த காரணத்தால் திருமணமான சில ஆண்டுகளில் இவரது மனைவி இவரைப் பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால் செந்தில்குமாருக்கும் அவரது தந்தை சுப்பிரமணியத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், உறவினர் வீட்டுத் திருமணத்துக்காக சுப்பிரமணியத்தின் மனைவி பத்மினி சென்றுள்ளார்.
வீட்டுக்குத் திரும்பியபோது சுப்பிரமணியம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து பத்மினி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூர் போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் தான் வீட்டைவிட்டு புறப்படும்போது செந்தில்குமார் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது, தந்தை, மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் பத்மினி தெரிவித்தார். இதையடுத்து, நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த செந்தில்குமாரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
அப்போது, தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததை செந்தில்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.