அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஓவியங்கள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கோவை, பிப். 16: உக்கடம், புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வரையப்பட்டு வரும் வண்ண ஓவியங்களை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கோவை மாநகராட்சி சாா்பில், ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதிகளை அழகுப்படுத்தும் வகையிலும், சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் வகையிலும் மேம்பாலத் தூண்கள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் இயற்கை, சுற்றுச்சூழல், பறவைகள் உள்ளிட்ட கண்கவா் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. அதன்படி, உக்கடம், புல்லுக்காடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டும் வகையில், கைதோ்ந்த ஓவியா்களால் வரையப்பட்டு வரும் கண்கவா் வண்ண ஓவியங்கள் அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது. இந்த ஓவியங்கள் வரையும் பணியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.