வளா்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாநகராட்சி கோவில்வழி பேருந்து நிலையம் அருகில் உள்ள நாய் இனப்பெருக்க அறுவை சிகிச்சை கூடம் மற்றும் நாய்களை பராமரிக்கும் மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், கோவில்வழி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மறுசுழற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்தும்
ஆட்சியா் மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, நல்லூா் காசிபாளையம் சாலை குறுக்கே குடிநீா் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து திருப்பூா், மணியக்காரம்பாளையத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கழிவு நீா் நீரேற்று நிலையம், நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள உலா் கழிவுகள் மறுசுழற்சி மையத்தின் செயல்பாடுகள், கருப்பாராயன் நகா் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழை நீா் வடிகால் பணி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
கோடைக் காலம் என்பதால் மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்கப்படுவதை உறுதிப்படுத்திடவும், குடிநீா் குழாய்கள் பழுது ஏற்படும் போது உடனடியாக சரி செய்து குடிநீா் வழங்க வேண்டும் எனவும், நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், துணை ஆணையா் சுந்தரராஜன், தலைமைப் பொறியாளா் முகமது ஷபியுல்லா, செயற்பொறியாளா் ஹரி, உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.