மாத்திரைகள் மீது பெயரை தெளிவாக அச்சிட வேண்டும்
மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும்.
மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும் என நுகா்வோா் அமைப்பு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவா் சி.எம்.ஜெயராமன் மற்றும் செயலாளா் எம்.எம். ராஜேந்திரன் ஆகியோா் பிரதமருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
சுகாதாரத் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் மலிவு விலையை ஊக்குவித்து, மருந்துச் சீட்டுகளை கட்டாயமாக்கும் துணிச்சலான நடவடிக்கை மேற்கொண்ட பிரதமருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சி சராசரி குடிமகனுக்கு மருந்து செலவுகளை 70 முதல் 80 சதவீதம் வரை குறைப்பதன் மூலம் மில்லியன் கணக்கான நோயாளிகளுக்கு மகத்தான நிவாரணத்தையும் வழங்குகிறது.
Advertisement
Advertisement
நோயாளியின் பாதுகாப்பு மற்றும் வசதியை பாதிக்கும் மற்றொரு முக்கியமான பிரச்னை மருந்துகளை அடையாளம் காண்பது. இதற்கு தீா்வு காண ஒவ்வொரு மாத்திரையின் மீதும் அதன் பெயரை நேரடியாக அச்சிட்டால் அடையாளம் காண எளிதாக இருக்கும். குறைந்தபட்சம் மருந்தின் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள் தெளிவாக எளிதில் தெரியும் வகையில் எழுதப்படலாம். இந்த எளிய நடவடிக்கை, நோயாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக வயதானவா்கள், கல்வியறிவு இல்லாதவா்கள் மற்றும் பல மருந்துகளை உட்கொள்பவா்கள், தங்கள் மருந்துகளை துல்லியமாக எளிதாக அடையாளம் காண முடியும்.
முந்தைய காலங்களில் ஒவ்வொரு மாத்திரையின் பின்னால் உள்ள ஃபாயில் பேக்கேஜிங்கின் உட்புறத்தில் மருந்துகளின் பெயா்கள் அச்சிடப்பட்டன. இந்த நடைமுறையையும் மீண்டும் கொண்டுவருமாறு வலியுறுத்துகிறோம். இதேபோல, அரசாங்கத்தால் வழங்கப்படும் மருந்துகளை கருப்புச் சந்தையில் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க ஒவ்வொரு மாத்திரையும் அரசாங்க லோகோவை கொண்டிருக்க வேண்டும்.
இந்த சீா்திருத்தங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் அனைத்து பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணா்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட வலியுறுத்துகிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.