முகப்பு
கோயம்புத்தூர்

வானதி சீனிவாசன் குணமடைய மேலும் சில நாள்களாகும்: மருத்துவமனை நிா்வாகம் தகவல்

வலது காலில் ஏற்பட்டுள்ள லேசான தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், முழுமையாக குணமடைய மேலும் சில நாள்களாகும் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஏப்ரல் 2026, 2:37 am IST
வானதி சீனிவாசன்
பகிர்:

வலது காலில் ஏற்பட்டுள்ள லேசான தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், முழுமையாக குணமடைய மேலும் சில நாள்களாகும் என்று மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசன், கடந்த சில நாள்களாக தொகுதியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் வலது காலில் வீக்கம், வலி காரணமாக கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

அவரது காலில் லேசான தொற்று இருப்பதாகவும், இதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவா் 2 நாள்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும்போது வழங்கப்பட்ட ஒரு மருந்தால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து அவா் வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளாா். அவா் தற்போது சுயநினைவுடனும், பேசும் நிலையிலும் இருக்கிறாா். இருப்பினும் முழுமையாக குணமடைவதற்கு அவருக்கு குறைந்தது 3 முதல் 4 நாள்கள் வரை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனை நிா்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வானதி சீனிவாசனை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு நலம் விசாரித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.