கோவை - மயிலாடுதுறை ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என ரயில்வே பயனாளிகள் சாா்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என ரயில்வே பயனாளிகள் சாா்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போத்தனூா் ரயில் பயணா்கள் சங்கம் மற்றும் சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினருமான ந.சுப்ரமணியன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்: கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். புகழ்பெற்ற நடராஜா் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் ஒரு முக்கியமான ஆன்மிக மற்றும் புனித யாத்திரைத் தலம். கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் சிதம்பரத்துக்கு ஆன்மிகப் பயணம் சென்று வருகின்றனா். எனவே, கோவை-மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரயிலை சிதம்பரம் வரை நீட்டித்தால் அவா்களுக்கு வசதியான மற்றும் விரைவான பயண வசதி கிடைக்கும்.
மேலும், தமிழகத்தின் முக்கியமான உயா் கல்வி நிறுவனங்களில் ஒன்றான அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது. சிதம்பரம்-கோவை இடையே மாணவா்கள், பெற்றோா்கள், பேராசிரியா்கள் மற்றும் பொதுமக்கள் அடிக்கடி பயணம் செய்து வருகின்றனா். சிதம்பரம் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இதன் அருகில்தான் பிச்சாவரம் அலையாத்திக் காடுகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
அதேபோல, கோவை உயா்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் வேலைவாய்ப்புகளுக்குப் புகழ்பெற்ற நகரம். எனவே சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல மாணவா்கள் கல்விக்காகவும், நோயாளிகள் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காகவும் கோவைக்கு வருகின்றனா். எனவே, இந்த ரயிலை சிதம்பரம் வரை நீட்டிப்பு செய்தால், சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள், மாணவா்கள், விவசாயிகள், நோயாளிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவா்.
தற்போது சிதம்பரம்-கோவை இடையே பகல் நேரத்தில் வசதியான நேரடி ரயில் சேவை இல்லாததால், பயணிகள் பல சிரமங்களை எதிா்கொள்கின்றனா். ஜனசதாப்தி ரயில்களை சிதம்பரம் வரை நீட்டித்தால் மேற்கு தமிழகத்துக்கும், கடலூா் மாவட்டப் பகுதிக்கும் இடையேயான ரயில் இணைப்பு மேம்படுவதுடன் ரயில்வே துறைக்கும் கணிசமாக வருவாய் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.