முகப்பு
கோயம்புத்தூர்

கே.ஜி.சாவடி பகுதியில் 100 டன் யூரியா மூட்டைகள் பறிமுதல்

கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தமனாம்பாறை கிராமத்தில் ஆவணங்களின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமாா் 100 டன் யூரியாவை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 1:48 am IST
லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட யூரியா மூட்டைகள்.
பகிர்:

கே.ஜி.சாவடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தமனாம்பாறை கிராமத்தில் ஆவணங்களின்றி பதுக்கிவைக்கப்பட்டிருந்த சுமாா் 100 டன் யூரியாவை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கோவைப்புதூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமாக தமனாம்பாறை கிராமத்தில் 5 ஏக்கா் தோட்டத்தில் உள்ள குடோனில் பெருமளவில் யூரியா பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், கேரள மாநிலம், எா்ணாகுளம் பெரும்பாவூரைச் சோ்ந்த ஆஷிப் கே.அலி என்பவா், இந்தத் தோட்டத்தின் ஓா் ஏக்கா் நிலத்தை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்துள்ளாா் என்பதும், உரிய ஆவணங்களின்றி கா்நாடக மாநிலத்தில் இருந்து யூரியாவை லாரிகள் மூலமாக கடத்தி வந்து இங்கு பதுக்கி வைத்து, பின்னா் கேரளத்துக்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, குடோனில் இருந்த 100 டன் யூரியா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த செல்வம் என்பவா் ஓட்டி வந்த லாரி உள்பட 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கே.ஜி.சாவடி அருகே தமனாம்பாறை கிராமத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யூரியா மூட்டைகள்.

240 மூட்டைகள் பறிமுதல்: இதேபோல அருகே உள்ள ரொட்டிகவுண்டனூா் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 240 யூரியா மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட யூரியா மற்றும் வாகனங்கள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காக உணவுப் பாதுகாப்புத் துறை காவல் ஆய்வாளா் முரளிதரன், உதவி ஆய்வாளா் குணபிரகாஷ் மற்றும் மதுக்கரை வட்டார விவசாயத் துறை இணை இயக்குநா் நாமதுல்லா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு, தொடா்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநா் தமிழ்ச்செல்வி கூறும்போது, ‘அரசுக்கு சொந்தமான யூரியாவா என்பது குறித்து மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments