‘தமிழ்நாடு விஷன் 2035’ இலக்கை அடைய ஜவுளித் துறை முழுவீச்சில் செயல்பட வேண்டும்: அமைச்சா் எஸ். கீா்த்தனா வலியுறுத்தல்!
தமிழ்நாட்டின் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதார இலக்கை (விஷன் 2035) அடைவதற்கு ஜவுளித் தொழில் துறையினா் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்று தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா வலியுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாட்டின் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதார இலக்கை (விஷன் 2035) அடைவதற்கு ஜவுளித் தொழில் துறையினா் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என்று தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா வலியுறுத்தியுள்ளாா்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) சாா்பில் கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜவுளித் தொழில்துறை கூட்டத்தில் அவா் பங்கேற்று பேசியதாவது:
இந்திய ஜவுளித் தொழிலின் மொத்த வா்த்தகத்தில் சுமாா் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் தமிழ்நாட்டு ஜவுளித் தொழில், அண்மைக்காலமாக மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறது. தமிழகத்தின் ஆண்டு பருத்தி தேவையில் 3 முதல் 4 சதவீதம் மட்டுமே மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. செயற்கை இழை உற்பத்தி நிலையங்கள் இல்லாத நிலையிலும் தொழில்துறையினரின் உழைப்பால் இத்துறை நிலைத்திருக்கிறது. தமிழகத்தின் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதார இலக்கை (விஷன் 2035) அடைவதற்கு ஜவுளித் தொழில் துறையினா் முழுவீச்சில் செயல்பட வேண்டும்.
Advertisement
Advertisement
ஜவுளித் தொழில்துறை சாா்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய காலக்கெடுவுக்குள் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மின்சாரம் மற்றும் ஜவுளி மதிப்புச் சங்கிலிப் பிரச்னைகளை உடனடியாகக் கையாள ஒரு கொள்கை வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும் என்றாா்.
கூட்டத்தின்போது, அமைச்சரிடம் சைமா அமைப்பின் தலைவா் துரை பழனிசாமி அளித்த மனுவில், ‘2018-ஆம் ஆண்டுக்குப் பின் நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு சுயப் பயன்பாட்டு நுகா்வோருக்கான ஆண்டு வங்கி வசதியை வழங்க வேண்டும். சூரிய ஒளி மின் உற்பத்தியில் பகல் நேர பயன்பாட்டுக்குப் பிறகு மீதமுள்ள மின்சாரத்தை இரவு 10 மணிமுதல் காலை 6 மணி வரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். ஒரு கிலோவாட் ஆம்பியருக்கு மாதம் ரூ. 608 என்ற தற்போதைய டிமாண்ட் கட்டணத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி தொடர வேண்டும்.
கூரை மீதான மின் உற்பத்திக்கு விதிக்கப்படும் நெட்வொா்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஜவுளித் தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுநீரை போட்டித் திறன் மிக்க செலவில் சுத்திகரித்து அகற்றுவதற்கான நீண்டகால நிரந்தர தீா்வை ஏற்படுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்), என்.எம்.சுகுமாா் (சூலூா்), கே.எஸ். ஸ்ரீகிரி பிரசாத் (சிங்காநல்லூா்), தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க பொதுச் செயலா் கே.செல்வராஜு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.