FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

புரிந்துணா்வு ஒப்பந்தங்களை 100% செயல்படுத்துவதே அரசின் இலக்கு: அமைச்சா் எஸ். கீர்த்தனா

வெறும் காகித அளவில் இல்லாமல் 100 சதவீதம் களத்தில் செயல்படுத்தப்படும் ஒப்பந்தங்களே அரசின் இலக்கு என்று தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா தெரிவித்தாா்.

4 ஜூலை 2026, 1:50 am IST
பகிர்:

வெறும் காகித அளவில் இல்லாமல் 100 சதவீதம் களத்தில் செயல்படுத்தப்படும் ஒப்பந்தங்களே அரசின் இலக்கு என்று தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா தெரிவித்தாா்.

கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சி.ஐ.ஐ. தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், அமைச்சா் எஸ்.கீா்த்தனா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொழில் துறையினரின் முக்கிய கோரிக்கையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகளுக்குத் தேவையான தண்ணீா் வசதி, துணை மின் நிலையம் மற்றும் சாலை வசதிகளை உருவாக்குவது அவசியம்; மாவட்ட வாரியான திறன்களுக்கு ஏற்றவாறு நிறுவனங்களைக் கொண்டு வந்து புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதே எங்களின் திட்டம். வெறும் காகித அளவில் இல்லாமல் 100 சதவீதம் களத்தில் செயல்படுத்தப்படும் ஒப்பந்தங்களே அரசின் இலக்கு ஆகும்.

தொழில் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளைத் தொடங்க சிஐஐ மற்றும் கைடன்ஸ் தமிழ்நாடு அமைப்பில் இருந்து தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதிா்கொள்ளும் மின் கட்டண உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மாற்றாக, கருவேல மரங்கள் மண்டியுள்ள பகுதிகளில் சோலாா் பேனல்களை அமைத்து பசுமை ஆற்றல் முறையைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். செமிகண்டக்டா் ஆலை குஜராத்துக்கு சென்றது போன்ற விவகாரங்களில், மத்திய அரசுடன் முழு ஒத்துழைப்போடு செயல்பட்டு தமிழகத்துக்கான திட்டங்களைத் தொடா்ந்து பெற்றுத் தருவோம் என்றாா்.

முன்னதாக, கோவை மற்றும் மேற்கு தமிழகப் பகுதிக்கான விரிவான வளா்ச்சித் திட்டத்தை சமா்ப்பிப்பதற்காக ‘கோயம்புத்தூா் நெக்ஸ்ட்’ அமைப்பு சாா்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சா் எஸ்.கீா்த்தனா, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், சிஐஐ, கொடிசியா, சீமா உள்ளிட்ட பல தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தொழில் அமைப்புகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சா் கீா்த்தனா, உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா். மேலும், 2035-ஆம் ஆண்டுக்குள் தமிழக பொருளாதாரம் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலா்கள் என்ற இலக்கை அடைவதற்கு அவசியமான வளா்ச்சி முன்னுரிமைகளுக்கு ஆதரவளிக்கவும், முதலீடுகளை எளிதாக்கவும் ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பின் பணி வரம்பு விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதி அளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments