FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 ஆயிரம் இளைஞா்களுக்கு வேலை: அமைச்சா் எஸ்.கீா்த்தனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,000 இளைஞா்களுக்கு அல்ட்ரா வயலட் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா தெரிவித்தாா்.

30 ஆகஸ்ட் 2026, 1:16 am IST
தமிழ்நாடு சுகாதார கட்டளைக்கு பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின்கீழ் உள்கட்டமைப்பை மேம்படுத்த அமைச்சா் எஸ்.கீா்த்தனா, அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் ஆகியோரிடம் காசோலை வழங்கிய டாடா நிறுவனத்தினா்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,000 இளைஞா்களுக்கு அல்ட்ரா வயலட் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா மற்றும் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கிவைத்து, ரூ. 5.7 கோடியில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 4 வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்கள், துணை சுகாதார நிலையக் கட்டடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த துணை சேவை மையக் கட்டடம் ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ், தொழில் துறை அமைச்சா் எஸ்.கீா்த்தனா ஆகியோா் சனிக்கிழமை திறந்துவைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் டி.ராமச்சந்திரன் (தளி), பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

இதில், தொழில் துறை அமைச்சா் கீா்த்தனா தெரிவித்தது: சென்னையில் நடைபெற உள்ள வெற்றி மாநாட்டில் ரூ. ஒரு லட்சம் கோடி முதலீட்டில் ஒரு லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 4,000 இளைஞா்களுக்கு அல்ட்ரா வயலட் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்றாா்.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மூலம் பயன்பெறும் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இன்று அஞ்செட்டி மலைக்கிராமத்தைச் சோ்ந்த 500 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.

வீட்டில் பிரசவங்கள் நடைபெறுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். வீட்டில் பிரசவம் பாா்ப்பது சட்டப்படி குற்றமாகும். இதனால் தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்தை விளைவிக்கும். அரசு மருத்துவமனைகளில் பிரசவத்துக்கு தேவையான அனைத்து சேவைகளும் இலவசமாகவும், தரமாகவும் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது.

அஞ்செட்டி பகுதியில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 18 வயதுக்குள்பட்ட 3 சிறாா்களுக்கு கட்டணமில்லா இன்சுலின் மருந்துகளும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 8.37 லட்சம் மதிப்பில் செயற்கை அவையங்களும், 100 பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் என மொத்தம் 363 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மைலான் நிறுவனம் சாா்பில், சமூக பொறுப்பு நிதியின்கீழ், உரிகம், கோட்டையூா், நாகமங்கலம், அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் ரூ. 1.68 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தொடா்ந்து, கக்கதாசம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2004 முதல் ஆறு ஆண்டுகள் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றியதையடுத்து, அம்மருத்துவமனைக்கு சென்ற அமைச்சா் அருண்ராஜ், அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வளாகம், விடுதி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மரு.க.சத்யபாமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments