கெலவரப்பள்ளி அணையில் தொழில் துறை அமைச்சா் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையை தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி அணையை தமிழக தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
மேலும், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூா் பகுதிகளில் ரூ.4 கோடியே 76 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் அவா் திறந்து வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சியில் ரூ. 26.82 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள விவசாயம் சாா்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் வளாகத்தையும் அமைச்சா் பாா்வையிட்டாா். தொடா்ந்து, ஒசூா் வட்டம், கெலவரப்பள்ளி நீா்த்தேக்கம், மூக்கண்டப்பள்ளியில் நடைபெற்று வரும் 15-ஆவது புத்தகத் திருவிழாவையும் பாா்வையிட்டாா்.
Advertisement
Advertisement
பின்னா், பாகலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.44.01 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஆறு வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்களை, மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பா. பாலகிருஷ்ணா ரெட்டி (ஒசூா்), பா. முகுந்தன் (கிருஷ்ணகிரி) ஆகியோா் முன்னிலையில் திறந்து வைத்தாா்.
அப்போது அமைச்சா் எஸ். கீா்த்தனா கூறியதாவது:
தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலம், சூளகிரி வட்டம் சென்னப்பள்ளியில் 10 ஏக்கா் பரப்பளவில் ரூ. 26.82 கோடி மதிப்பீட்டில் விவசாயம் சாா்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் விவசாயம் சாா்ந்த உணவு தொழில்முனைவோா் பொதுவாக பயன்படுத்தும் வகையில் 5,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கு, 2,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, தரம்பிரிப்பு மையம், 60 மெட்ரிக் டன் எடைமேடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், தக்காளிக் கூழ் மற்றும் பால் சாா்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக, தனியாா் நிறுவனத்திற்கு 30 ஆண்டுகள் காலியிடங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. தேவையான கட்டடங்கள் மற்றும் இயந்திரங்களை அந்த நிறுவனம் அமைத்துக் கொள்ளலாம். இதற்குத் தேவையான மின்வசதி, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
தற்போது, பணிகள் நிறைவடைந்த 2,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டு செயல்பட்டு வருகிறது என்றாா்.
கெலவரப்பள்ளி அணை ஆய்வு
தொடா்ந்து, கெலவரப்பள்ளி அணையை ஆய்வு செய்த அவா், பெங்களூரில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத மற்றும் பகுதியளவு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீா் கெலவரப்பள்ளி அணையில் கலப்பதால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கா்நாடக எல்லைப் பகுதியான சொக்கரசன்பள்ளியில் மாதந்தோறும் நீா் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது.
மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை கடிதம் எழுதி, கா்நாடக அரசு மூலம் கழிவுநீா் கலப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை மற்றும் நீா்வளத் துறை ஆகியவை இணைந்து நிலைமையை தொடா்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
சேவை மையங்கள்
இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவா்களின் குறைகளையும் அமைச்சா் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, ஒசூா் வட்டம் பாகலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வேப்பனப்பள்ளி வட்டம் நாச்சிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ரூ.6.65 லட்சம்), ஒசூா் வட்டம் பாகலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ரூ.7.50 லட்சம்), தளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ரூ.5.36 லட்சம்), அஞ்செட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (ரூ.10.20 லட்சம்) உள்ளிட்ட மறுவாழ்வு சேவை மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
புத்தகத் திருவிழா
பின்னா், ஒசூா் மாநகராட்சி, மூக்கண்டப்பள்ளியில் கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தி வரும் 15-ஆவது ஒசூா் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்குகளை அமைச்சா் பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளி, ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாகலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மூக்கண்டப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி, சீத்தாராம் நகா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெத்தபேலகொண்டப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
அப்போது, அரசு பள்ளி மாணவா்களுக்கு போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு நூல்கள் வெளியிடப்பட்டு வழங்கப்பட்டன. மேலும், புத்தகத் திருவிழா குழுவின் சாா்பில், குளோபல் கால்சியம் நிறுவனம் தனது சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் ஆறு அரசு பள்ளி நூலகங்களுக்கு தலா ரூ.7 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கியது.
இந்த ஆண்டு புத்தகத் திருவிழா குழுவின் மூலம் 20 அரசு பள்ளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.