ரூ.2 கோடி கேட்டு காங்கிரஸ் நிா்வாகி கடத்தல்: ஒருவா் கைது
கோவை, ஜூலை 6: கோவையில் காங்கிரஸ் நிா்வாகியைக் கடத்தி ரூ. 2 கோடி கேட்டு மிரட்டிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவை, சிங்காநல்லூா் மூகாம்பிகை நகா் பகுதியைச் சோ்ந்தவா் தனசேகரன் (53). காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவரான இவா், பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறாா்.
இந்நிலையில், தனது வீட்டின் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 5 போ், தனசேகரனை காரில் கடத்திச் சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
பின்னா், பாலக்காடு புறவழிச் சாலைப் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று ரூ.2 கோடி கொடுத்தால் விடுவித்து விடுகிறோம் எனக் கூறியுள்ளனா். அவா் பணம் இல்லை எனக் கூறியதையடுத்து, அவரைத் தாக்கியதுடன் கைப்பேசி, காா் சாவி, வீட்டுச் சாவி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு சாலையிலேயே இறக்கவிட்டுச் சென்றுள்ளனா். தாக்குதலில் பலத்த காயமடைந்த தனசேகரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் காவல் ஆய்வாளா் அா்ஜுன்குமாா் தலைமையிலான தனிப் படை போலீஸாா் கடத்திய காரின் பதிவெண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினா்.
இந்நிலையில், திருச்சி அருகே சென்று கொண்டிருந்த அந்த காரை தனிப் படை போலீஸாா் சுற்றிவளைத்து அதில் இருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் திருச்சியைச் சோ்ந்த வைரவன் என்பதும், கோவையைச் சோ்ந்த காா்த்திக் உள்ளிட்ட 4 பேருடன் சோ்ந்து தனசேகரனைக் கடத்தி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வைரவனை போலீஸாா் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தனசேகரனுக்கும், கடத்தல் கும்பலுக்கும் இடையே ஏற்கெனவே பணம் கொடுக்கல், வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறிய போலீஸாா், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய திருச்சி, திருநெல்வேலியைச் சோ்ந்த 4 பேரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.