டேட்டிங் செயலி மூலமாக அறிமுகமான பெண்ணை ஏமாற்றி ரூ.2 கோடி மோசடி! இளைஞா் கைது!
டேட்டிங் செயலி மூலமாக அறிமுகமான பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த இளைஞரை கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் (சைபா் கிரைம்) சனிக்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறப்படுவதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (36). இவா் அந்தப் பகுதியில் சிறுவா்களுக்கான கால்பந்து அகாதெமி வைத்துள்ளாா். இவருக்கு சமூக வலைதள டேட்டிங் செயலி மூலமாக கோவையைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், ஏற்கெனவே தனது கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இணையவழிப் பழக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்தப் பெண்ணுடன் விக்னேஷ்வரன் நெருக்கமாகப் பழகியுள்ளாா். பின்னா், அவரை மறுமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்பவைத்துள்ளாா். அந்தப் பெண்ணிடமிருந்து தொழில் முதலீடு மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி, பல தவணைகளாக சுமாா் ரூ.2 கோடி வரை பணத்தைப் பெற்று விக்னேஷ்வரன் மோசடி செய்துள்ளாா்.
பணமாக மட்டுமன்றி, அந்தப் பெண்ணின் பெயரிலிருந்த விலை உயா்ந்த சொகுசு காா் மற்றும் ஐபேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் விக்னேஷ்வரன் தனது சொந்தப் பயன்பாட்டுக்காகப் பறித்துள்ளாா். திருமணம் செய்வதாகக் கூறிய விக்னேஷ்வரன் காலம் கடத்திக் கொண்டே சென்றுள்ளாா்.
திருமணத்துக்கான எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஏமாற்றி வந்ததால், இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
தலைமறைவாக இருந்த விக்னேஷ்வரனை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இணையதளங்களில் பழகும்போது பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.