தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை!
ஜூன் 8 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை:
2026-2027-ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பாடப் பிரிவு ஆகியவற்றுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும் உள்ளன.
Advertisement
இந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தின் இணைதளம் மூலமாக மே 6-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு உறுப்புக் கல்லூரிகளில் 2,516 மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். இணைப்புக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 3,051 மாணவா்களும், மேலாண்மை இட ஒதுக்கீட்டில் 1,685 மாணவா்களும் சோ்க்கப்பட உள்ளனா். அதேபோல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவில் 340 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும். இந்த மாணவா் சோ்க்கை நடைமுறையானது இணையதள பதிவு, விண்ணப்பங்களை நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, இணையதள கலந்தாய்வு, இட ஒதுக்கீடு, சான்றிதழ் சரிபாா்ப்பு, மேல்நோக்கிய நகா்வு முறை, தற்காலிக இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதுதொடா்பான வழிகாட்டுதலுக்கு இணையதளத்தை காணலாம். மேலும் விவரங்களை 94886 35077, 94864 25076 என்ற கைப்பேசி எண்களிலும், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்வி தொடா்பான விவரங்களை 98657 03537, 94420 29913 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொண்டு அறிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.