வேளாண் படிப்புக்கு ஜூன் 23-ல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; ஜூலை 6 முதல் கலந்தாய்வு
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், நிகழாண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் குறித்து...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலைப் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜூலை 6- ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
2026 - 2027- ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உறுப்பு, இணைப்புக் கல்லூரிகளில் 4,736 இடங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 340 வேளாண் பாடப் பிரிவு ஆகியவற்றுக்கான மாணவா் சோ்க்கை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலமாக நடைபெற உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும், 3 பட்டயப் படிப்புகளும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும் உள்ளன.
இந்தப் படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் மே 6- ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை(ஜூன் 17) நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
இதற்காக சுமாா் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
இந்த நிலையில், மாணவா் சோ்க்கைக்கான உத்தேச கலந்தாய்வு அட்டவணையைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 23- ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பட்டியலில் குறைபாடுகள் இருந்தால் ஜூன் 24 முதல் 27 வரை சரி செய்துகொள்ளலாம்.
பட்டயப் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 29- ஆம் தேதி நடைபெறுகிறது. பட்டப் படிப்புக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 6- ஆம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் பொதுப் பிரிவினா், 7.5 சதவீத அரசு இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 16- ஆம் தேதி முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
மாணவா் சோ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூலை 20- ஆம் தேதியும், பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு ஜூலை 22 முதல் 28- ஆம் தேதி வரையும் நடைபெறுகின்றன.
இதைத் தொடா்ந்து ஆகஸ்ட் 1, 11, 21- ஆம் தேதிகளில் அடுத்தடுத்த சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள், இட ஒதுக்கீடுகள் நடைபெறுகின்றன. துணைத் தோ்வு முடிவுகள் வெளியான பிறகு துணைத் தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை, துணை கலந்தாய்வு போன்றவை நடைபெற உள்ளன.
செப்டம்பா் 9- ஆம் தேதி முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன. பட்டப் படிப்புக்கான உடனடி மாணவா் சோ்க்கை செப்டம்பா் 15- ஆம் தேதி நடைபெறுகிறது. கலந்தாய்வு தொடா்பான மேலும் விவரங்களுக்கு மாணவா்கள் 94886 35077, 94864 25076 என்ற எண்களில் வார நாள்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்புகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.