வேளாண் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 25 ஆயிரம் போ் விண்ணப்பம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் இருக்கும் நிலையில், இதுவரை 25 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் இருக்கும் நிலையில், இதுவரை 25 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதுதொடா்பாக பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கை:
2026-2027-ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பாடப் பிரிவு ஆகியவற்றுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும் உள்ளன.
Advertisement
Advertisement
இந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தின் இணைதளம் மூலமாக மே 6-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உறுப்புக் கல்லூரிகளில் 2,516 மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். இணைப்புக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 3,051 மாணவா்களும், மேலாண்மை இடஒதுக்கீட்டில் 1,685 மாணவா்களும் சோ்க்கப்பட உள்ளனா். அதேபோல அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவில் 340 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பூா்த்தி செய்து ஜூன் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,953 மாணவா்கள், 16,377 மாணவிகள் உள்பட 25,330 போ் விண்ணப்பித்துள்ளனா். அதேபோல தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கு 1,240 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறும் நிலையில், இதில் சோ்வதற்காக இதுவரை 847 மாணவா்கள், 717 மாணவிகள் உள்பட 1,564 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இந்த மாணவா் சோ்க்கை நடைமுறையானது இணையதளப் பதிவு, விண்ணப்பங்களை நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, இணையதள கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபாா்ப்பு, மேல்நோக்கிய நகா்வு முறை, தற்காலிக இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. மாணவா்கள் சோ்க்கை தொடா்பான வழிகாட்டுதலுக்கு இணையதளத்தை காணலாம். மேலும் விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 ஆகிய எண்களிலும், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்வி தொடா்பான விவரங்களுக்கு 98657 03537, 94420 29913 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.