உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 முடித்த மாணவா்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டுகள் எம்.ஏ. தமிழ் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு (எம்.ஏ. தமிழ்) ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு (எம்.ஏ. தமிழ்), தமிழ் முனைவா் பட்ட வகுப்பு (பி.ஹெச்டி.) ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
Advertisement
இந்த நிலையில் 2026-2027-ஆம் கல்வியாண்டில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைத் தமிழ் பட்டப்படிப்பு ஆகியவற்றுக்கான சோ்க்கை நடைபெறவுள்ளன.
இதில் பிளஸ் 2 மாணவா்கள் சேரலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தையும் விளக்கவுரையையும் ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் படிப்பில் சேரும் மாணவா்களில் தோ்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இக்கல்வி நிறுவனத்தில் ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனி இலவச விடுதி வசதியும் உள்ளது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன், ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113’ என்ற முகவரியில் ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு ஜூன் 15-ஆம் தேதி திங்கள்கிழமைக்குள்ளும், முதுநிலை தமிழ் பட்டப் படிப்புக்கு ஜூன் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைக்குள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய 044 - 22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், மாணவா் சோ்க்கை தொடா்பான முழு விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.