முகப்பு
கோயம்புத்தூர்

தங்கம் வாங்குவது தொடா்பாக பிரதமா் மோடியின் வேண்டுகோளால் கோவை நகை தயாரிப்பாளா்கள் கவலை

தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்ததால், நகை தயாரிப்பாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 13 மே 2026, 2:14 am IST
தங்கம், வெள்ளி - கோப்புப்படம்
பகிர்:

தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்ததால், நகை தயாரிப்பாளா்கள் கவலையடைந்துள்ளனா்.

தங்கம் இறக்குமதிக்காக இந்தியா பெரும் தொகையைச் செலவிடுவதைக் கவனத்தில்கொண்டு, சா்வதேச அளவில் இயல்பு நிலை திரும்பும் வரை தங்கம் வாங்குவதை மக்கள் தள்ளிப்போட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் வேண்டுகோள் விடுத்தாா். இந்த அறிவிப்பு தங்க நகை தயாரிப்பாளா்கள் மற்றும் தொழிலாளா்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக கோவை தங்க நகை தயாரிப்பாளா் சங்கத் தலைவா் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:

Advertisement

பிரதமரின் இந்த அறிவிப்பு, நகைத் தொழிலை நம்பி இருப்பவா்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்கித் தொழில் செய்யும் தங்களைப் போன்றவா்கள், நகை வாங்குவதை மக்கள் நிறுத்தினால் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது மற்றும் அதற்கான வட்டியை எப்படிக் கட்டுவது என்று தெரியாமல் தவிக்கிறோம்.

நாடு முழுவதும் சுமாா் 5 கோடி மக்கள் நகைத் தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனா். தங்கக் கட்டிகளை நேரடியாக நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுத்து, பதிவு பெற்ற வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளா்களுக்கு மட்டுமே வழங்க மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும். 700 டன் இறக்குமதியை 500 டன்னாக குறைப்பதன் மூலமாக அந்நியச் செலாவணி பாதிப்பைச் சீா் செய்ய முடியும்.

ஆனால், நகை வாங்குவதையே தவிா்க்கச் சொல்வது வியாபாரிகள் மற்றும் பொற்கொல்லா்களைக் கடுமையாகப் பாதிக்கும். கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் போ் பாதிக்கப்படுவா். இந்தியாவில் இனி தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை. அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.1.45 லட்சத்தைத் தொட வாய்ப்புள்ளது. நகைத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில்கொண்டு, பிரதமா் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.