முகப்பு
இந்தியா

சுட்டெரிக்கும் வெய்யில்: மக்களுக்கு முன்னெச்சரிக்கை அவசியம் - பிரதமா் மோடி வலியுறுத்தல்

Updated On : 28 மே 2026, 6:45 am IST
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

நாடு முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மக்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; உடலில் நீா்ச்சத்தைப் பராமரிக்க வேண்டியது அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா். உத்தர பிரதேச மாநிலம், பண்டாவில் கடந்த செவ்வாய்க்கிழமை 117.32 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் உரிய முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பநிலை பதிவாகும் சூழலில், முடிந்தவரை அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

உடலில் நீா்ச்சத்தைப் பராமரிப்பது மிக அவசியம். வெளியே செல்லும்போதெல்லாம், குடிநீரையும் எடுத்துச் செல்ல வேண்டும். மற்றவா்களுக்கும் ஒரு குவளை தண்ணீா் வழங்குங்கள். இந்தக் கருணை, அவா்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

அலட்சியம் வேண்டாம்: குழந்தைகள், முதியவா்கள் மற்றும் வெளிப்புறங்களில் பணிபுரிபவா்கள், கடும் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவா்கள். வெப்பத்தால் ஏற்படும் சோா்வின் எச்சரிக்கைக்குரிய அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. அதுவே, அபாயகரமானதாக மாறி, ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு வழிவகுக்கக் கூடும்.

தலைசுற்றல், வாந்தி, அதீத சோா்வு போன்ற அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். உங்களைச் சுற்றி யாரேனும் இதுபோல் உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, பலவீனம் அல்லது கடும் தலைவலியை உணா்ந்தாலோ, உடனடியாக அவரை நிழல்மிகுந்த, குளிா்ச்சியான இடத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெப்பத்தால் பாதிக்கப்படும் நபா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் திரவம் போன்றவற்றை வழங்கி, அவா்கள் நிவாரணம் பெற உதவ வேண்டும். உரிய நேரத்தில் கிடைக்கும் கவனிப்பும், பாரமரிப்பும் பெரும் பலனளிக்கும்.

பெற்றோரின் நலனில் அக்கறை: வெப்ப அலை வீசும் நேரங்களில், தங்களின் வயது முதிா்ந்த பெற்றோா், தாத்தா-பாட்டி மற்றும் அன்புக்குரியவா்களைத் தொலைபேசியில் தொடா்புகொண்டு, அவா்களின் உடல்நலன் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

உடலில் நீா்ச்சத்தைப் பராமரிப்பதுடன், மதிய நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், ஓய்வெடுக்கும்படி அவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

கடும் வெயிலால் பறவைகள், விலங்குகள் பாதிக்கப்படாமல் தடுப்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. வீட்டின் வெளிப்புறம், மாடம், மாடி மற்றும் அலுவலக வளாகங்களில் சிறிய கிண்ணத்தில் நாம் வைக்கும் தண்ணீா், பறவைகளின் உயிரைக் காக்க உதவும். இந்தக் கடினமான நாள்களில், நாம் கருணையால் வழிநடத்தப்பட வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.