ஈரோடு

பட்டா உட்பிரிவு மாறுதல் பணி அரசாணை: வி.ஏ.ஓ., நில அளவையரிடையே முரண்பாடு

DIN

உட்பிரிவு பட்டா மாறுதல் பணியின்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவையர்கள் தகவல் அளிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால்  இணைந்து பணியை முடிப்பதில் இருதரப்பினரிடையே முரண்பாடு எழும் நிலை ஏற்பட்டுள்ளது.    
தமிழகம் முழுவதும் உட்பிரிவு பட்டா மாறுதல்களுக்கு, நில அளவையர்கள் கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இருவரும் இணைந்து செயல்படுவதில் முரண்பாடு எழுந்துள்ளதால் பட்டா கிடைப்பதில் தாமதம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால் தாலுகா அலுவலகத்துக்கு மக்கள் அலைய வேண்டி இருந்தது.  இதை எளிமைப்படுத்தும் வகையில், ஆன்லைன்  மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெறும் முறையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  2011 ஆம் ஆண்டில் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து, ஆன்லைன் மூலம் மக்கள் பட்டா மாறுதல் பெற்று வருகின்றனர். 
ஆன்லைன் பட்டா மாறுதலில் காலதாமதம், இழுத்தடிப்பு  என பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால், உட்பிரிவு பட்டா மாறுதலில் நில அளவையர் அளவீடு செய்து, முதுநிலை நில அளவையர் கண்காணித்து, துணை வட்டாட்சியரின்  பரிந்துரை மூலம்  வட்டாட்சியர்  பட்டா மாறுதல் வழங்கலாம் என அரசாணை  வெளியிடப்பட்டது.
இதை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதைத் தொடர்ந்து, அரசிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிசம்பர் 26 இல் வெளியிடப்பட்ட அரசாணையில், நில அளவையர்கள், உட்பிரிவு பட்டா மாறுதல் அளவீட்டுக்குச் செல்லும் தேதி உள்ளிட்ட விவரத்தை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகவல் கூறி, அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதை ஏற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது போராட்டத்தைக்  கைவிட்டு பணிக்குச் சென்றனர். உட்பிரிவு அளவீடு செய்யும் பணியை மேற்கொள்வதில் நேர முரண்பாடு காரணமாக  அப்பணியில் தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நில அளவையர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
பட்டா மாறுதல் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று முழு புல பட்டா மாறுதல், மற்றொன்று உட்பிரிவு பட்டா மாறுதல். பட்டா மாறுதலுக்கு மக்கள் அலைவதைத் தவிர்க்கும் வகையில் இணையம் மூலம்  விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. இதில், உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு சர்வே துறை மூலம் அளவீடு செய்தால் போதும் என எளிமையான வழியில் பட்டா மாறுதலை மக்கள் பெற்று வருகின்றனர். இந்நிலையில், உட்பிரிவு பட்டா மாறுதல் குறித்த விவரம் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர்களின் பணியானது 21 வகையான சான்றுகள், பட்டா மாறுதல் இணையதள விண்ணப்பங்களை விசாரணை நடத்தி அனுமதி வழங்குவது, அம்மா திட்ட முகாம், உயர் அதிகாரிகள் வரவேற்பு, பொங்கல் பரிசு,  இலவச வேட்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் அடங்கியுள்ளன. ஆனால், நில அளவையர் பணி என்பது காலை 6 முதல் 12 மணிக்குள் அளவீட்டை முடித்து அறிக்கை தாக்கல் செய்து சான்றுக்கு ஏற்பாடு செய்வது. ஆனால், உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு தற்போது கிராம நிர்வாக அலுவலர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற புதிய ஆணையால் கடந்த ஒரு வாரமாக அளவீடு செய்ய அவர்களை அழைத்தாலும், வேறு பணிகள் இருப்பதன் காரணமாக வர முடியாத நிலை தொடர்கிறது. 
இப்பிரச்னையில் இருதரப்பும்  இணைந்து பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பட்டா மாறுதல் அளவீடு பணியை முன்பிருந்ததைப் போல குறிப்பிட்ட நாளில் முடிக்க இயலவில்லை. மேலும், பொது மக்களுக்கு பட்டா மாறுதல் செய்து  தாமதமின்றி அளிக்க  முடியாத நிலை உள்ளது. இதுதவிர, குறிப்பிட்ட நாளில் பட்டா மாறுதல் செய்து அளிக்காத காரணமாக  ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரின் கண்டனத்துக்கும் நில அளவையர்கள் ஆளாக நேரிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இப்பிரச்சினையின் தீவிரம் கருதி பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய கால தாமதத்தைத் தவிர்க்க மாற்று வழிகளைக் காண அரசு முன் வரவேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT