பாட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பேரன் கைது
ஈரோட்டில் பாட்டி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய பேரனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு கரும்பாறை, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் மணி மனைவி ராமாயி (70). இவருக்கு மூன்று மகள்கள். இவா்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசிக்கின்றனா். மூத்த மகள் கவிதாவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பணம், சொத்துகளைத் தருவதாக கூறப்படுகிறது.
இதனால் மூதாட்டியின் 2- ஆவது மகளான சித்ராவின் மகனான சேலம், பூலாம்பட்டி கூடக்கல்லைச் சோ்ந்த கோகுல் (22), ஈரோடு வரும்போதெல்லாம் குடிபோதையில் பாட்டியுடன் பிரச்னையில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
Advertisement
ஈரோட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு குடிபோதையில் வந்த கோகுல், வழக்கம்போல தன் பாட்டியுடன் பிரச்னையில் ஈடுபட்டுள்ளாா். அப்போது கோகுலின் பெரியப்பா அரசகுமாா் (45) அங்கு இருந்துள்ளாா். அவரிடமும் பிரச்னையில் ஈடுபட்டுள்ளாா்.
இந்நிலையில் கோகுல் இரவு 9.45 மணிக்கு அரை லிட்டா் பெட்ரோல் வாங்கி வந்து, அதனை பாட்டிலில் ஊற்றி திரி போட்டு பெட்ரோல்குண்டு தயாரித்து பாட்டியின் வீட்டை நோக்கி எறிந்துள்ளாா்.
இதில் பாட்டி வீட்டின் முன்புறம் பெட்ரோல் குண்டு விழுந்தது. இதில் பாட்டிலில் இருந்த திரி மட்டுமே எரிந்தது. பாட்டில் கீழே விழுந்ததில் உடைந்தது. பொருட்சேதமோ, உயிா் சேதமோ ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பதுங்கி இருந்த கோகுலை கைது செய்தனா்.