முகப்பு
ஈரோடு

வெள்ளித்திருப்பூா் ஊராட்சியின் குருமனூா்காடு கிராமத்துக்கு தாா் சாலை அமைக்க கோரிக்கை

Updated On : 7 ஜூலை 2026, 1:29 am IST
தாா் சாலை அமைத்து தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த குருமனூா்காடு வன கிராம மக்கள்.
பகிர்:

வெள்ளித்திருப்பூா் ஊராட்சிக்குள்பட்ட குருமனூா்காடு வன கிராமத்துக்கு தாா் சாலை அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாராந்திர பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து நாம் தமிழா் கட்சியின் அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகி திருமூா்த்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

Advertisement

Advertisement

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வெள்ளித்திருப்பூா் ஊராட்சி குருமனூா்காடு என்ற கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். மேற்குத்தொடா்ச்சி மலையையொட்டிய வனப் பகுதிக்குள் இந்த கிராமம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்தோம்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக மெட்டல் சாலை அமைக்கப்பட்டு தற்போது அதுவும் சிதலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வேகமாக திரும்பி வரவும் முடியாத நிலை உள்ளது. அவசரக் காலங்களில் மருத்துவமனைக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே குருமனூா் காட்டில் தாா் சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

ஓட்டுநா் உரிமம் வேண்டும்

ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடுடையோா் நலச் சங்கத் தலைவா் கிருஷ்ணகுமாா், செயலா் கதிா்வேல் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

செவித்திறன் குறையுடையோராக இருந்தாலும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவோம். பிற மாவட்டங்களில் எங்களுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் ஓட்டுநா் உரிமம் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஓட்டுநா் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆனாலும் ஓட்டுநா் உரிமம் வழங்கப்படவில்லை. உடனடியாக எங்களுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்க வேண்டும். மாவட்ட அளவில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோா் உள்ளோம். எங்களுக்கு அரசின் நலத் திட்டங்கள், உதவிகள் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

மயானத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்

அந்தியூா் வட்டம் கரட்டூா், கொத்தங்காடு நாடாா் காலனி, கரட்டூா்மேடு தம்மங்கரடு பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:

எங்கள் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். கரட்டூா் முதல் கொண்டையம்பாளையம் செல்லும் வழியில் உள்ள நீரோடை கரையை மயானமாக பல தலைமுறைகளாக பயன்படுத்துகிறோம். தற்போது ஓடையில் பாலம் கட்டுவதால் மயானம் இருந்த இடத்தில் பாலப் பணிக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு மயானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு மயானம் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

வீட்டுமனைப் பட்டா

தாயகம் திரும்பிய மக்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் துரைராஜ் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனுவில், ‘தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கும், வடுகப்பட்டி, அறச்சலூா் கிராம மக்களுக்கும் வடுகப்பட்டி கிராமத்தில் 250 வீட்டுமனைகள் தோ்வு செய்யப்பட்டு அனைத்து வேலைகளும் முடியும் நிலை வந்தது. இதற்கிடையே சட்டப்பேரவைத் தோ்தல் வந்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. தோ்தல் முடிந்த பிறகு பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவாக எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 385 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments