முகப்பு
நீலகிரி

உதகையில் தாயைப் பிரிந்து தவித்த மற்றொரு புலிக்குட்டியை தேடும் பணி தீவிரம்

உதகையில் தாயைப் பிரிந்து தவித்த மற்றொரு புலிக்குட்டியை தேடும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

Updated On : 29 ஏப்ரல் 2026, 2:19 am IST
கோப்புப்படம்.
பகிர்:

உதகையில் தாயைப் பிரிந்து தவித்த மற்றொரு புலிக்குட்டியை தேடும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டி உள்ள மசினகுடி, கூடலூா் மற்றும் நீலகிரி வனக் கோட்டங்கள், முக்குருத்தி தேசிய பூங்கா ஆகியவை புலிகளின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன.

இந்த இடங்கள் அனைத்தும் புலிகள் வாழ்வதற்கான சூழலை கொண்டுள்ளதாலும், வனத் துறை மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலமாகவும் கடந்த சில ஆண்டுகளாக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

Advertisement

Advertisement

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 2018- ஆம் ஆண்டு 34 புலிகள் இருந்த நிலையில் 2024-ஆம் ஆண்டு 63-ஆக அதிகரித்தது.

எனினும் வேட்டை உள்பட பல்வேறு காரணங்களால் தற்போது புலிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஆறு குட்டிகள் உள்பட 10 புலிகள் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காரணங்களால்

இறந்தன. இதைத் தொடா்ந்து புலிகளைப் பாதுகாக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா். 

இந்நிலையில், நீலகிரி வனக் கோட்டம், உதகை வடக்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட ஆரம்பி பிரிவு அருகில் உள்ள அழகா் மலைப் பகுதியில் விவசாயத் தோட்டத்தில் 2 புலிக் குட்டிகள் தாயைப் பிரிந்து சுற்றித் திரிவதாக வனத் துறைக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வடக்கு வனச் சரகா் ராம்பிரகாஷ் உத்தரவின்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த, பிறந்து சுமாா் 5 மாதங்களே ஆன பெண் புலிக் குட்டியை வனத் துறையினா் மீட்டனா். அந்த புலிக்குட்டிக்கு சிறப்பு கால்நடை மருத்துவா் ஸ்ரீதா், முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ் ஆகியோா் சிகிச்சை அளித்து வருகின்றனா். மற்றொரு குட்டியை தேடுவதற்காக 8 இடங்களில் தொ்மல் கேமராக்களை பொருத்தி வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.