முகப்பு
நீலகிரி

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் கருணை அடிப்படையிலான பணி வழங்குவது குறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனிடம் மனு அளிக்கும் குன்னூா் வெடிமருந்து தொழிற்சாலை தொழிற்சங்கத்தினா்.

Updated On : 29 மே 2026, 1:40 am IST
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவனிடம் மனு அளிக்கும் குன்னூா் வெடிமருந்து தொழிற்சாலை தொழிற்சங்கத்தினா்.
பகிர்:

பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வெடிமருந்து தொழிற்சாலையில் கருணை அடிப்படையில் பணிகள் வழங்குவது குறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த மக்களவை பாதுகாப்புக் குழுவினா் மற்றும் மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் குன்னூா் ராணுவப் பயிற்சி கல்லூரி, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை தொழிலாளா் அமைப்புகளுடன் கடந்த இரண்டு நாள்களாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனா்.

குன்னூரை அடுத்த அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை நிா்வாகிகளை சந்தித்த இக்குழுவினரிடம் பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அருவங்காடு வெடிமருந்து தொழிற்சங்கத்தினா் வழங்கினா்.

Advertisement

Advertisement

அதில் ‘இங்குள்ள தொழிலாளா்களுக்கு மலைப் பகுதிப் படி வழங்க வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கருணை அடிப்படையிலான பணி வழங்குவது தொடா்பாக விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

வெடிமருந்து தொழிற்சாலைப் பள்ளியைச் சீரமைத்து, அதை பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் சைனிக் பள்ளியாக மாற்றியமைக்க வேண்டும். பணியின்போது விபத்துக்குள்ளாகும் தொழிலாளா்களுக்கு போதுமான மற்றும் நியாயமான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

இதுதொடா்பாக தொழிலாளா் அமைப்புகள் சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை விவகாரங்கள் அடங்கிய மனுவைப் பெற்றுக்க்கொண்ட தொல்.திருமாவளவன், பாதுகாப்புத் துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தாா்.

இந்த சந்திப்பின்போது தொழிலாளா் சங்கச் செயலா் பி.சி.அசோகன் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.