அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு: பூமி பூஜை நிறுத்தம்
குமாரவலசில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக நடைபெற இருந்த பூமி பூஜை எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.
குமாரவலசில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக நடைபெற இருந்த பூமி பூஜை எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது.
வெள்ளக்கோவிலில் புதிய பேருந்து நிலையம் அருகில் டி.ஆர்.நகர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் மரத்தடியிலும், தலைமையாசிரியர் அறையிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். பள்ளிக்கு அலுவலகம், ஆய்வுக்கூடத்துக்குத் தனி அறைகள், மாணவ, மாணவிகளுக்கான கழிவறை வசதிகள் ஏதும் இல்லை. இதன் காரணாக பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பள்ளிக்கு அருகிலுள்ள குமாரவலசில் ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்ட அரசு உத்தரவிட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக, அந்த இடத்தில் இருக்கும் நகராட்சி கழிப்பறையை அப்புறப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அருகிலுள்ள அங்கன்வாடி மையம், பொதுக்கிணறு ஆகியவை பாதிக்கப்படும் எனக் கூறியும் அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மாற்று இடத்தில் கழிவறை கட்டித்தர அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்ய கல்வித் துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரரும் வந்தனர். உடனே, அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், பூமி பூஜை நடத்த முடியாமல் அனைவரும் திரும்பிச் சென்றனர்.