காங்கயம் அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு: நோயாளிகள் அவதி
காங்கயம் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காங்கயம் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காங்கயம் பேருந்து நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் காங்கயம், அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற எஸ்.சங்கர்கணேஷ் கூறியதாவது :
தொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த நான் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினேன். மருத்துவமனையில் சுகாதார வசதி இல்லை. இங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது.
இதனால், ஏற்படும் துர்நாற்றம் காரணமாக மருத்துவமனைக்குள் அமர்ந்து நோயாளிகளால் சாப்பிடக்கூட முடியவில்லை. செவிலியர்கள், பணியாளர்கள் நோயாளிகளை மரியாதை இல்லாமல் பேசி வருகின்றனர்.
வயதானவருக்கு கை நரம்பில் ஊசி போடும்போது ரத்தம் தரையில் சிந்தியது. தரையில் சிந்திய ரத்தத்தை சுத்தம் செய்யவில்லை. நோயாளிகள் ரத்தத்தை மிதித்துக் கொண்டு சென்றனர் என்றார்.
மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் விசாரணை நடத்தி காங்கயம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.