தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 21 லட்சம் மோசடி: கிளை மேலாளர்கள் 3 பேர் கைது
திருப்பூரில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக
திருப்பூரில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் போலி ரசீது தயாரித்து ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கிளை மேலாளர்கள் 3 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் நீதிமன்ற வீதியில் தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பிரிவு மேலாளர்களாக கோவை டாடபாத்தைச் சேர்ந்த அருண்குமார் (30), ராமநாதபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபு (54), திருப்பூர், கவுண்டம்பாளையம் நால்ரோட்டை சேர்ந்த திவாகர் (30), சங்கர், மணிகண்டன் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் 2017 ஜனவரி முதல் 2018 பிப்ரவரி வரை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு நிறுவனத்துக்கு செலுத்தாமல் போலி ரசீது தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக நிறுவனத்தின் மேலாளர் நாகராஜன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் போலி ரசீது தயாரித்து ரூ. 21 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, அருண்குமார், வெங்கடேஷ் பாபு, திவாகர் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.