முகப்பு
திருப்பூர்

16 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா: மாணவர்களுக்கு 27 இல் திறனாய்வு போட்டிகள்

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் ஆகியவை சார்பில் நடைபெற உள்ள 16ஆவது திருப்பூர்

Updated On : 24 ஜனவரி 2019, 1:34 am IST
பகிர்:

திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் ஆகியவை சார்பில் நடைபெற உள்ள 16ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை ஒட்டி  ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 27)  மாணவ, மாணவியருக்கு கலை, இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இது குறித்து புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுவின் மாணவர் திறனாய்வுப் போட்டிக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.ராமமூர்த்தி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
 வரும் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை காங்கயம் சாலை பத்மினி கார்டனில் 16 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் 12 இடங்களில் மாணவர்களுக்கான கலை, இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன.
திருப்பூரில் கேஎஸ்சி பள்ளி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, குமார் நகர் மேல்நிலைப் பள்ளி, இடுவம்பாளையம் மேல்நிலைப் பள்ளி, பாண்டியன் நகர் சாரதா வித்யாலயா, புதுராமகிருஷ்ணாபுரம் மேல்நிலைப் பள்ளி, பெருமாநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளி, குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அவிநாசி டவுன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு தலைப்புகளில் ஓவியம், கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் கொடுக்கப்பட்டுள்ள தலா 3 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்துப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்பதற்கான தாள்கள், படம் வரைவதற்கான ஓவிய சார்ட் ஆகியவை போட்டி மையங்களில் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்போர் ஏதேனும் ஒரு மையத்தில் மட்டும் பங்கேற்கலாம்.  போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பிப்ரவரி 6ஆம் தேதி புத்தகத் திருவிழா வளாகத்தில் பரிசுகள் வழங்கப்படும்.
பிப்ரவரி 4ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு புத்தகத் திருவிழா வளாகத்தில் 3 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளும் அறிவியல் கண்காட்சி நடைபெறும்.  இதில், சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். பங்கேற்போர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பிப்ரவரி 5ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு புத்தகத் திருவிழா வளாகத்தில் மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டி நடைபெறும்.  இதில் 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இளநிலை பிரிவாகவும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உயர்நிலை பிரிவாகவும் இப்போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.