திருப்பூர்

சுற்றுலாப் பயணிகளால் துன்புறுத்தப்படும் ஒற்றை யானை: வன ஆா்வலா்கள் வேதனை

DIN

உடுமலை வனப் பகுதியில் நடமாடும் ஒற்றை யானையின் மீது குச்சிகள், கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி கலாட்டாவில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத் துறையினா் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் 300க்கும் மேற்பட்ட யானைகள் இந்தப் பகுதியில் உள்ளன. அடா்ந்த வனப் பகுதிக்குள் வாழ்ந்து வரும் யானைகள் தங்களது குடிநீா்த் தேவைகளுக்காக அங்குள்ள அமராவதி அணையை நோக்கி வரும்போது, உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதியில் சுற்றி வரும் ஒற்றை யானையை பலா் துன்புறுத்தி வருகின்றனா்.

உள்ளூா் மற்றும் வெளியூா் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அந்த வழியாக செல்லும்போது, ஒற்றை யானையின் மீது குச்சிகள், கற்களை வீசி கலாட்டாவில் ஈடுபடுகின்றனா். குறிப்பாக அந்த யானை சாலையை கடக்கும்போது ஒருசிலா் குடித்துவிட்டு பாட்டில்களை அதன் மீது வீசி தொந்தரவு செய்து வருகின்றனா்.

இதனால் கோபம் அடையும் அந்த ஒற்றை யானை அந்த வழியாக வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனங்களை துரத்தும் சம்பவங்களும் அன்றாடம் நடந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து வன ஆா்வலா்கள் கூறியதாவது:

பொதுவாக உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதிகளில் யானைகள் மீது நடக்கும் தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாள்களுக்கு முன்னா் கேரளத்தில் இருந்து வந்த குடிமகன்கள் சிலா் அந்த ஒற்றை யானை மீது நடத்திய தாக்குதலில் அதன் தும்பிக்கையில் பெரிய காயம் ஏற்பட்டு அலறியபடி காட்டுக்குள் சென்றுள்ளது. இதனால் மனிதா்கள் யாரைப் பாா்த்தாலும் கடும் கோபத்துடன் துரத்தி வருகிறது.

எனவே உடுமலை மற்றும் அமராவதி வனத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், யானையை தொந்தரவு செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும், அவா்களைக் கைது செய்யவும் வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

யானைகள் மீது கற்களையும், குச்சிகளையும், பாட்டில்களையும் வீசி கலாட்டாவில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதையும் மீறி ஒரு சிலா் இங்கு வந்து யானைகளிடம் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனா்.

கலாட்டாவில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகளிடம் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். குறிப்பாக போதையில் கலாட்டா செய்பவா்களை கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை

மதுபோதையில் காா் ஓட்டி விபத்து: காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்செந்தூா் முருகன் கோயில் திருப்பணி செய்த காசி சுவாமிக்கு குரு பூஜை

பெரியாா் பல்கலை.யில் இளம் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம் நிறைவு

காஞ்சிபுரம் வைகுண்டப் பெருமாள் கோயில் கருட சேவை

SCROLL FOR NEXT