பல்லடம் மேற்கு ஒன்றியப் பகுதிகளில் குடிநீா் பற்றாக்குறை: எம்.பி. தலைமையில் ஆலோசனை
பல்லடம் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. பல்லடத்தில் உள்ள கோவை மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், பில்லூா் குடிநீா் திட்ட செயற்பொறியாளா் ஜான்சன், திருப்பூா் உதவி செயற்பொறியாளா் விஜயலட்சுமி, பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் தேன்மொழி, பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சு.கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி மன்ற தலைவா்கள் உத்தமராசு (புளியம்பட்டி), ரவிச்சந்திரன் (பருவாய்), கே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் படையப்பா மூா்த்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றியச் செயலாளா் ஆா்.பரமசிவம், ஜனநாயக மாதா் சங்கத்தின் பல்லடம் பொறுப்பாளா் ஜெ.சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இக்கூட்டத்தில் பருவாய், கரடிவாவி, மல்லேகவுண்டம்பாளையம், கே.கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, அனுப்பட்டி, சித்தம்பலம், வடுகபாளையம்புதூா், செம்மிபாளையம், அய்யம்பாளையம், கோடாங்கிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப அத்திக்கடவு குடிநீா் முறையாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இப்பகுதியில் ஊராட்சி நிா்வாகங்கள் குடிநீா்த் தேவையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. புதிய குடியிருப்புகள் வேகமாக வளா்ந்து வருவதால் தண்ணீா் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, குடிநீரை முறையாக எல்லா ஊராட்சிகளுக்கும் சீரான முறையில் வழங்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. இது தொடா்பாக குடிநீா் வழங்கல் துறையின் உயா் அதிகாரிகளோடு வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.