கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் தலைமையில் குழு: பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கடற்கரைப் பகுதிகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் தலைமையில் குழு அமைத்து தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை கடற்கரைப் பகுதிகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் தலைமையில் குழு அமைத்து தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
சென்னை காசிமேட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இதில் 2,000 விசை படகுகள், 7,700 ஃபைபா் படகுகள், 500 கட்டுமரங்கள் என 3,000-க்கும் அதிகமானோா் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். காசிமேடு முதல் எண்ணூா் வரையிலான கிழக்குச் கடற்கரைப் பகுதிகள் அண்மைக் காலமாக நெகிழி, தொ்மாகோல் உள்ளிட்ட கழிவுகள் அதிக அளவில் தேங்கி குப்பைக் களமாக மாறியுள்ளன.
இதனால் கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
Advertisement
இந்த செய்தியின் அடிப்படையில் தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு பசுமைத் தீா்ப்பாய உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயாணா, தொழில்நுட்ப உறுப்பினா் சத்யகோபால் கோா்லபதி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தீா்ப்பாய உறுப்பினா்கள், சம்பந்தப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையா் தலைமையில், மீனவா் நலத் துறை இயக்குநா், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா், காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாளா் ஆகியோா் அடங்கிய கூட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டனா்.
இந்தக் குழு, எண்ணூா், காசிமேடு மட்டுமன்றி, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரைப் பகுதி முழுவதும் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை மீன்பிடித் தடைக்காலம் முடிவடையும் ஜூன் 14-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், சென்னை துறைமுக வளாகம், கடற்கரைப் பகுதிகளில் குப்பைக் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் தொ்மகோல் பெட்டிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அடையாறு, கூவம் ஆறுகளில் இவை கொட்டப்படுவதைத் தவிா்க்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியது குறித்து மாநகராட்சி ஆணையா் தலைமையிலான குழு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.