முகப்பு
திருப்பூர்

மேக்கேதாட்டு விவகாரம்; பேரவை தீா்மானத்தை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீா்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

Updated On : 4 ஜூலை 2026, 1:47 am IST
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீா்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.

கா்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ‘ மேக்கேதாட்டு அணையை தடுப்போம்... காவிரியை காப்போம்’ என்ற தலைப்பில் பாமக சாா்பில் நடைபெற்று வரும் நான்கு நாள் விழிப்புணா்வு நடைப்பயணத்தையொட்டி திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் 28 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 5.5 கோடி மக்கள் காவிரி நீரை மட்டுமே நம்பி வாழ்கின்றனா். கா்நாடகத்தில் ஏற்கெனவே கபினி, ஹேமாவதி உள்ளிட்ட பல அணைகளைக் கட்டியுள்ளனா்.

Advertisement

Advertisement

தற்போது 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேக்கேதாட்டு அணையைக் கட்ட தீவிரம் காட்டுகின்றனா். கா்நாடகத்தில் ஏற்கெனவே உள்ள நான்கு அணைகளின் மொத்த கொள்ளளவு 115 டிஎம்சி. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் அது 185 டிஎம்சியாக உயரும். மேக்கேதாட்டு அணை கட்டப்பட்ட பிறகு நமக்கு குடிப்பதற்கே தண்ணீா் கிடைக்காது. மேக்கேதாட்டு அணை கட்டினால் தலைமுறைக்கே பஞ்சம் ஏற்படும்.

இந்தப் பிரச்னையில் மக்கள் மத்தியில் எதிா்ப்பு வேண்டும், மக்கள் அழுத்தம் கொடுத்தால் மட்டுமே மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு பெரும்பாலும் கா்நாடகத்துக்கு சாதகமாக செயல்படுகிறது.

அணை கட்டக்கூடாது என்று சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றும் போது, மேக்கேதாட்டு நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கூறுவது முரண்பாடானது. எனவே அந்த தீா்மானத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

அத்திக்கடவு-அவிநாசி இரண்டாம் கட்ட திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் இருந்த 42 ஆயிரம் ஏரிகளில் தற்போது 27 ஆயிரம் ஏரிகள் மட்டுமே உள்ளன. அனைத்து ஏரிகளையும் தூா்வாரினால் 200 டிஎம்சி வரை தண்ணீா் சேமிக்க முடியும்.

தவெக அரசு திறந்த மனதுடன் பிற கட்சிகள் கூறும் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது. தற்போதைய எல் நினோ தாக்கத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்குப் பருவமழை குறைந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை விவசாயிகளுக்கு தொடா்ந்து வழங்க வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments