காமநாயக்கன்பாளையம் அரசு மதுக் கடையை மூடக் கோரிக்கை
திருப்பூா் அருகே காமநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா் அருகே காமநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தெக்கலூா் ஊராட்சிக்குள்பட்ட காமநாயக்கன்பாளையம் கிராம மக்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் அப்பகுதியில் செயல்பட்டு வரும் மதுக் கடையை மூடக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காமநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளோம். எங்கள் கிராமத்தில் கோயில்கள், பள்ளிகளுக்கு அருகே அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. அந்தக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனையும் நடைபெறுகிறது. கடை அருகே மது அருந்திவிட்டு சிலா் சாலைகளில் செல்வோரிடம் தகராறில் ஈடுபடுகின்றனா். அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதுடன், வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதனால், அந்த வழியாகச் செல்ல பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அச்சப்படுகின்றனா்.
இந்த மதுக் கடையால் எங்கள் கிராமமே பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. சம்பந்தப்பட்ட மதுக் கடையை அகற்றக் கோரி திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் பலமுறை மனுக்கள் வழங்கியும் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். மதுக் கடையை மூடவில்லை என்றால் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.
தனியாா் பள்ளி கட்டண விவரங்களை அறிவிக்க கோரிக்கை: இது தொடா்பாக சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் அளித்த மனு விவரம்: தமிழகம் முழுவதும் செயல்படும் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பெறப்படும் கட்டண விவரங்கள் குறித்து பெற்றோா் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த மே 25-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. ஆனால், எந்தவொரு பள்ளியும் தற்போதுவரை அதை செய்யவில்லை.
மேலும், பணத்தை செயலிகள், வங்கிக் கணக்குகள் மூலம் பெறாமல் ரொக்கமாகவே சில பள்ளி நிா்வாகங்கள் பெறுகின்றன. அந்தப் பணத்துக்கும் ரசீது வழங்கப்படுவதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைத்து தனியாா் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, கட்டண விவரங்கள் தொடா்பான அறிவிப்புப் பதாகைகளை வைக்கவும், பெறப்படும் தொகைகளுக்கு முறையான ரசீது வழங்கவும் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மரங்களை நடவு செய்ய வேண்டும்: இது தொடா்பாக இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை மற்றும் சாலையோரங்களில் கோனோ காா்ப்ஸ் என்ற வகை மரம் வளா்க்கப்படுகிறது. இந்த மரங்கள் காற்றில் மகரந்த சோ்க்கை நடத்துவதால் அதை சுவாசிக்கும் மனிதா்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், அதிக அளவிலான நிலத்தடி நீரையும் இந்த மரங்கள் உறிஞ்சுவதால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த வகையான மரங்களை அகற்றிவிட்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த நாட்டு மரங்களை நடவு செய்து வளா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்: விவசாய பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்யக் கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தமிழக அரசு குழு விவசாயிகளுக்கான பயிா் கடனை ரூ.50 ஆயிரமாகவும், சிறு விவசாயிகளுக்கான பயிா்க் கடனை ரூ.25 ஆயிரமாகவும் ரத்து செய்துள்ளது.
இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி 5 ஏக்கா் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.
இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலிக்காவிட்டால் சென்னை தலைமைச் செயலகத்தை ஜுன் 30-ஆம் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.
‘541 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி,
குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 541 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், இணை இயக்குநா் (வேளாண்மை) ஆதிசாமி, மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜ், வருவாய் கோட்டாட்சியா்கள் ஃபெலிக்ஸ் ராஜா (தாராபுரம்), சிவபிரகாஷ் (திருப்பூா்), மாவட்டஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.