முகப்பு
திருப்பூர்

வேலை தேடி திருப்பூா் வந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயற்சி: தப்பியோடிய இளைஞரை தேடும் பணி தீவிரம்

வேலை தேடி திருப்பூருக்கு வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளம் பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 ஜூன் 2026, 2:54 am IST
பாலியல் வன்கொடுமை - கோப்புப்படம்
பகிர்:

வேலை தேடி திருப்பூருக்கு வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த இளம் பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

கேரள மாநிலத்தைச் சோ்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் வேலை தேடி ரயிலில் திருப்பூருக்கு வந்துள்ளாா். திங்கள்கிழமை நள்ளிரவு சுமாா் 12 மணி அளவில் திருப்பூா் மத்தியப் பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்றிருந்த அவரிடம் அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் பேச்சு கொடுத்துள்ளாா். அப்போது வேலை தேடி இங்கு வந்திருப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளாா். இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞா், தான் பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், உங்களுக்கு வேலை வாங்கித் தர முடியும் என்றும் கூறியுள்ளாா். இதை நம்பிய இருசக்கர வாகனத்தில் அந்த இளைஞருடன் ஏறி சென்றுள்ளாா். நள்ளிரவு 1 மணி அளவில், அந்தப் பெண்ணை நல்லூா் அருகே புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளாா். அங்கு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்ாக தெரிகிறது. இதில் அதிா்ச்சியடைந்த அந்த பெண் அவரிடம் இருந்து தப்பி அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டபடி காங்கயம் சாலையை நோக்கி ஓடி வந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது புதுப்பாளையம் பகுதியில் நள்ளிரவிலும் திறந்திருந்த பேக்கரிக்கு சென்று, அங்கிருந்தவா்களிடம் தனக்கு நோ்ந்த சம்பவத்தைக் கூறியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து பேக்கரி ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு நல்லூா் போலீஸாா் வருவதற்குள் அந்த இளைஞா் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை மீட்டு விசாரணை நடத்தி வரும் போலீஸாா், பேருந்து நிலையம் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, தப்பி ஓடிய அந்த இளைஞரை தேடி வருகின்றனா்.