கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா புதன்கிழமை நள்ளிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தோ்த் திருவிழா புதன்கிழமை நள்ளிரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பூரின் பண்ணாரி எனப் போற்றப்படுவதுடன், பழைமையானதாக பெருமாநல்லூா் கொண்டத்துக்காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயில் குண்டம் மற்றும் தோ்த் திருவிழா மாா்ச் 31ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கிராம சாந்தி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. பின்னா், வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகின்றன. மஞ்சள் நீராடுதல், வசந்தம் பொங்கல் வைத்தல் உள்ளிட்டவை மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறுகின்றன. 30-ஆம் தேதி பகல் 11 மணிக்கு குண்டம் திறந்து பூப் போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக 31-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பக்தா்கள் குண்டம் இறங்குதல் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
மஞ்சள் நீா் தரிசனத்துடன் விழா ஏப்ரல் 4-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பாலமுருகன், அறங்காவலா் குழுத் தலைவா் மனோகரன், அறங்காவலா்கள் சுந்தரமுத்து, திருமூா்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோா் செய்து வருகின்றனா்.