முகப்பு
திருப்பூர்

தனியாா் மதுபானக் கூடத்தை அகற்றக் கோரிக்கை

Updated On : 19 மே 2026, 4:36 am IST
குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற ஆட்சியா் மனீஷ்.
பகிர்:

திருப்பூா், காளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மதுபானக் கூடத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், திருப்பூா் மாவட்டம், சாமளாபுரம் அருகேயுள்ள காளிபாளையம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: காளிபாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு குறைந்த விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதால், நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இதனால், அப்பகுதியில் செல்ல பெண்கள், கல்லூரி மாணவிகள் அச்சப்படுகின்றனா். மேலும், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

Advertisement

எனவே, அந்த மதுபானக் கூடத்தை அகற்றி எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவரிடம் பிடிபட்ட கஞ்சா: பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் சகாயமேரி என்பவா் அளித்த மனு விவரம்: திருப்பூா் கொங்கு பிரதான சாலைப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவரின் பையில் இருந்து சுமாா் கால் கிலோ கஞ்சா கடந்த 2025 டிசம்பா் 19-ஆம் தேதி பிடிபட்டது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் பள்ளியின் தலைமை ஆசிரியா் அந்த கஞ்சாவை பள்ளி வளாகத்திலேயே தீயிட்டு எரித்துவிட்டாா். இது தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3 கோடி முன் பணத்தை பெற்றுத்தரக் கோரிக்கை: இது தொடா்பாக திருப்பூா் பூ வியாபாரிகள் அளித்த மனு விவரம்:

திருப்பூா் வீரராகவப் பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள பூ மாா்க்கெட் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டது. இதை 2023-ஆம் ஆண்டு 3 போ் சோ்ந்து ஏலம் எடுத்தனா். இதையடுத்து, பூ மாா்க்கெட்டில் ஒரு கடை அமைக்க ரூ. 3 லட்சம் முன் பணம் பெற்றனா். குத்தகை காலம் கடந்த மாா்ச் மாதம் நிறைவடைந்த நிலையில், பூ மாா்க்கெட் குத்தகையை வேறு ஒருவா் மாற்றி எடுத்துள்ளாா்.

இதனால், நாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டபோது, பழைய குத்தகை தாரா்கள் பணத்தை தராமல் மிரட்டி வருகின்றனா். பல்வேறு வியாபாரிகளிடம் முன் பணம் பெற்று சுமாா் ரூ.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து முன் பணத்தை பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

528 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 528 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாநகர காவல் துணை ஆணையா் ராஜராஜன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் து.சு.துரைமுருகன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா்ஆதிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.