சொத்து தகராறில் உறவினா் அடித்துக் கொலை! முன்னாள் ராணுவ வீரா் கைது!
சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (60). விவசாயி. இவரது அண்ணன் மகன் சண்முகம் (45). முன்னாள் ராணுவ வீரா். இரு குடும்பத்தினருக்கும் இடையே பூா்வீகச் சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை அருகே ராமச்சந்திரன் மற்றும் சண்முகம் தரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் சண்முகம் இரும்புக் கம்பியால் ராமச்சந்திரனை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் உயிரிழந்தாா்.
Advertisement
இது தொடா்பாக கிருஷ்ணாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.