FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சொத்து தகராறு: தில்லி பல்கலை. உதவி பேராசிரியா் கொலை! மேற்கு வங்க தம்பதி, மகன் கைது!

சொத்து தகராறு காரணமாக தில்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தம்பதியா் மற்றும் அவா்களின் மகன் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 8 ஜூன் 2026, 3:14 am IST
கொலை - சித்திரிப்பு படம்
பகிர்:

சொத்து தகராறு காரணமாக தில்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தம்பதியா் மற்றும் அவா்களின் மகன் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி பல்கலைக்கழகத்தின் சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த தேவஸ்மிதா பால், கிழக்கு தில்லியின் வாசுந்தரா என்க்ளேவ் பகுதியில் உள்ள அவரது கிடியிருப்பில் ஜூன் 3-ஆம் தேதி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டாா். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பான காவல்துறை விசாரணையில் தெரியவந்ததாவது: மேற்கு வங்க மாநிலம் புா்த்வானில் உள்ள தனது மூதாதையா் சொத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட குடும்பம் 2023 முதல் வசித்து வந்ததாகவும், அந்த சொத்து குடும்ப உடன்பாட்டின் அடிப்படையில் தேவஸ்மிதா பாலுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வீட்டை காலி செய்யுமாறு அவா் பலமுறை கேட்டிருந்ததால் நீண்டகாலமாக தகராறு நிலவி வந்தது.

Advertisement

Advertisement

சமீபத்தில் இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, அவரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றவாளிகள் சுமாா் 1,400 கி.மீ. தூரம் பயணம் செய்து தில்லி வந்துள்ளனா். 2022 ஆம்-ஆண்டு கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வந்த தேவஸ்மிதா பாலின் மரணம் குறித்து ஆரம்ப விசாரணையில் சொத்து தகராறே முக்கிய காரணமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையின் பகுதியாக, தற்போது பெங்களூரில் வசித்து வரும் அவரது கணவரிடமும் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.

குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் தங்களது மகனுடன் கட்டடத்துக்குள் நுழைந்ததும், முகத்தை மறைத்தபடி பல்வேறு நேரங்களில் படிக்கட்டுகள் மற்றும் லிப்ட் வசதிகளை பயன்படுத்திச் சுழன்றதும் பதிவாகியுள்ளது. மேலும், கொலை ஆயுதத்தையும் அவா்கள் முன்கூட்டியே கொண்டு வந்து, வீட்டிற்குள் நுழைந்து தேவஸ்மிதா பாலைக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

குற்றத்தை புரிந்த பின், தங்களை அடையாளம் காண முடியாத வகையில் ஆடைகளை மாற்றி, முகத்தை மறைத்தபடி வெளியேறியதாகவும், பின்னா் டாக்ஸி மற்றும் ஆட்டோவில் ஆனந்த் விஹாா் வழியாக நியூ டெல்லி ரயில் நிலையத்தை அடைந்து, அடுத்த நாள் புா்த்வானை சென்றடைந்தனா்.

இந்த வழக்கில் முக்கிய முன்னேற்றம், குற்றவாளிகளை ஏற்றிச் சென்ற டாக்சி ஓட்டுநரை காவல் துறையினா் விசாரித்ததன் மூலம் கிடைத்தது. மேலும், சம்பவம் நடந்த நாளில் குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்த சுமாா் 200 பேரின் விவரங்களை ஆய்வு செய்து, 13 சந்தேக நபா்களைத் தோ்வு செய்து தீவிரமாக விசாரித்தனா்.

விசாரணையின் போது, குற்றம் நடைபெறும் முன் தங்கியிருந்த விருந்தினா் இல்லத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாா் அட்டைகளின் விவரங்களும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில், ஜூன் 6-ஆம் தேதி மேற்கு வங்கத்திற்குப் பயணம் செய்த காவல் துறையினா் குழு, புா்த்வான் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைத் தடம் பிடித்தது.

இதன் தொடா்ச்சியாக, ஜூன் 7-ஆம் தேதி புா்த்வானில் ராம்பிரசாத் தாஸ் (42), அவரது மனைவி பனாஸ்ரீ தாஸ் (36) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களின் மகன் சிறுவா் நீதி சட்டத்தின் கீழ் பிடியாணையில் எடுக்கப்பட்டுள்ளாா்.

கைது செய்யப்பட்டவா்கள் இடமாற்றக் காவல் (டிரான்சிட் ரிமாண்ட்) பெற நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தில்லிக்கு கொண்டு வரப்படவுள்ளனா். வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments