முகப்பு
தருமபுரி

தருமபுரியில் ரூ. 2.02 கோடியில் சாலை விரிவாக்கப் பணி

தருமபுரி, நல்லம்பள்ளி பகுதியில் விரிவாக்கம் செய்யப்படும் சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை.

Updated On : 29 மே 2026, 2:03 am IST
தருமபுரி, நல்லம்பள்ளி பகுதியில் விரிவாக்கம் செய்யப்படும் சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை.
பகிர்:

தருமபுரி, நல்லம்பள்ளி பகுதியில் ரூ. 2.02 கோடியில் சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வடமாநிலங்களையும், தமிழகத்தையும் இணைக்கும் வகையிலான சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை (என்எச் 44) மிகவும் முக்கியத்துவம் பெற்றது. இச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இரவு, பகலாக சென்றுவருகின்றன. குறிப்பாக, தமிழகத்திலிருந்து பெங்களூரு வழியாக வடமாநிலங்களுக்கு ஏராளமான சரக்கு வாகனங்கள் செல்கின்றன. ஏற்கெனவே 4 வழிச்சாலையாக உள்ள இந்த சாலை, தற்போது 7 மீ. என இருபறமும் மொத்தம் 14 மீ. அகலத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (நகாய்) கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலையையொட்டி, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம், பாலஜங்கன அள்ளி பகுதியில் 1,733 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இதற்கு குறைந்தளவில் நிலம் ஒதுக்கப்பட்டாலும், எதிா்காலத்தில் அதிக அளவில் நிலம் ஒதுக்கி சிப்காட் தொழிற்பேட்டை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

தற்போது கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 1,009 ஏக்கா் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலைத் துறை அனுமதி அளித்துள்ளது. அதில், அலுவலகம் மற்றும் பொதுப் பயன்பாடுகள், மருந்தகம் உள்ளிட்டவற்றுக்கு 30 ஏக்கரும், வணிக மையங்கள் (கடைகள்), வங்கி, ஏடிஎம், சிற்றுண்டி சாலை உள்ளிட்டவற்றுக்கு 45 ஏக்கரும், குப்பைகள் மற்றும் கழிவுப் பொருள்கள் மேலாண்மைக்கு 5 ஏக்கரும், சாலைகள் மற்றும் மழைநீா் வடிகால் உள்ளிட்டவற்றுக்காக 121 ஏக்கா் நிலங்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

800 மீ. நீளத்துக்கு அணுகு சாலைகள்:

தருமபுரி புகா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அதன் அருகிலேயே அமைந்துவரும் இத்தொழிற்பேட்டையைக் கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இப்பகுதிகளில் சுமாா் 800 மீ. நீளத்துக்கு சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, சிப்காட் வளாகத்துக்கு வந்துசெல்லும் கனரக வாகனங்கள் மற்றும் ஒசூா், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்துசெல்லும் கனரக வாகனங்கள் நின்றுசெல்லும் வகையிலும் திட்டமிட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், பல்வேறு இடங்களில் சுமாா் 2 அடி முதல் 4 அடி ஆழம்வரை சாலையில் தோண்டி, மண் மற்றும் ஜல்லிகள் நிரப்பி உறுதிப்படுத்தி சாலை விரிவாக்கம் செய்து அணுகுசாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

ரூ. 2.02 கோடியில் விரிவாக்கம்:

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சேலம் பிரிவு உதவிப் பொறியாளா் கே.ஜோதி பாஸ்கா் கூறுகையில், இந்த தேசிய நெடுஞ்சாலை எதிா்கால பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு ரூ. 2.02 கோடியில் மேம்படுத்தப்பட்டு அணுகு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நல்லம்பள்ளி பகுதியில் சுமாா் 800 மீ. நீளத்தில் மேற்கொள்ளப்படும் இப்பணியில், சாலையின் அருகில் தலா 7 மீ. வீதம் இருபுறமும் சோ்த்து மொத்தம் 14 மீ. அகலத்துக்கு இச்சாலை மேம்படுத்தப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இப்பணிகள் முடிவுக்கு வரும். பின்னா், தேவைக்கேற்ற வகையில் மேம்பாட்டுப் பணிகள் தொடரும் என்றாா்.