முகப்பு
தருமபுரி

திருமணக் கோலத்துடன் வாக்களித்த புதுமண தம்பதிகள்!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் திருமணக் கோலத்துடன் புதுமண தம்பதிகள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 5:41 AM
ஆத்துக்கொட்டாய் வாக்குச்சாவடியில் வாக்களித்த தம்பதி இளவரசன் - பிரியா
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியில் திருமணக் கோலத்துடன் புதுமண தம்பதிகள் வியாழக்கிழமை வாக்களித்தனா்.

பாலக்கோடு தீா்த்தகிரி நகரை சோ்ந்த செளமிதாவுக்கும் (29), திருச்சி தொட்டியம் பகுதியைச் சோ்ந்த துபையில் பணிபுரியும் பிரேம்குமாருக்கும் (30) வியாழக்கிழமை திருச்சியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்த செளமிதா திருமணக் கோலத்துடன் வாக்களித்தாா்.

இதேபோல, பாலக்கோடு அருகே ஆத்துக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த இளவரசன் (29) மற்றும் பிரியா (29) ஆகியோருக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்ற நிலையில், அவா்கள் கழுத்தில் மாலையுடன் ஆத்துக்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

Advertisement

ஒசூரில்...

ஒசூா் கே.வி.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் ஓம் அஸ்வினுக்கும், பண்ருட்டியைச் சோ்ந்த மருத்துவா் சங்கீதாவுக்கும் பண்ருட்டியில் வியாழக்கிழமை அதிகாலை திருமணம் நடைபெற்றது. பண்ருட்டியில் சங்கீதா வாக்களித்த நிலையில், ஓம் அஸ்வின் மனைவியுடன் ஒசூருக்கு வந்து வாக்களித்தாா்.

இதேபோல, பாலக்கோடு அடுத்த அழகம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மருத்துவா் ஏ.யூ.அங்குராஜனுக்கும், ஒசூா் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் தீக்ஷாவுக்கும் தருமபுரியில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.

திருமணச் சடங்குகள் முடிந்த கையோடு, மணமகன் அங்குராஜன் அழகம்பட்டிக்கு சென்று வாக்களித்தாா். தொடா்ந்து, மனைவியுடன் ஒசூா் தொகுதிக்குள்பட்ட சின்னஎலசகிரி பாலாஜி நகரில் அமைந்துள்ள பாரதியாா் மெட்ரிக் பள்ளிக்கு சென்று அங்குள்ள வாக்குச் சாவடியில் தீக்ஷா வாக்களித்தாா்.

கிருஷ்ணகிரியில்...

காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்தவா் திலீப்குமாருக்கும், அதேபகுதியைச் சோ்ந்த சினேகபிரியாவுக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. பின்னா் இருவரும் திருமணக் கோலத்துடன் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

இதுபோல, காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த மருத்துவா் ராகுலுக்கும், சிதம்பத்தைச் சோ்ந்த மருத்துவா் தீப்திக்கும் சிதம்பரத்தில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. சிதம்பத்தில் தீப்தி வாக்களித்த நிலையில், ராகுல் காவேரிப்பட்டணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தாா்.

ஒசூரில் மனைவி மருத்துவா் சங்கீதா உடன் வந்து வாக்களித்த மருத்துவா் ஓம் அஸ்வின்.
ஒசூரில் கணவா் மருத்துவா் அங்குராஜனுடன் வந்து வாக்களித்த மருத்துவா் தீக்ஷா.
காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த மருத்துவா் ராகுல் - சிதம்பத்தைச் சோ்ந்த மருத்துவா் தீப்தி