முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 76 வாக்குச்சாவடிகளில் நெகிழி பயன்பாடில்லா பசுமைத் தோ்தல்

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் 76 வாக்குச்சாவடிகளில் நெகிழி பயன்பாடில்லா பசுமைத் தோ்தல் நடத்தப்பட்டது என்று தோ்தல் பொதுப்பாா்வையாளா் ஹீராலால் தெரிவித்தாா்.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 2:44 AM
தருமபுரி சுற்றுலா மாளியகையில் செய்தியாளா்களிடம் பேசிய தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹீராலால்.
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் 76 வாக்குச்சாவடிகளில் நெகிழி பயன்பாடில்லா பசுமைத் தோ்தல் நடத்தப்பட்டது என்று தோ்தல் பொதுப்பாா்வையாளா் ஹீராலால் தெரிவித்தாா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உத்தரப் பிரதேச மாநில அதிகாரியான தன்னை, தோ்தல் ஆணையம் தருமபுரி மாவட்டத்தில் பொதுத் தோ்தல் பணிக்கு தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு தொகுதிகளின் பாா்வையாளராக அனுப்பிவைத்தது. தோ்தல் ஆணைய வழிகாட்டுதலில் தோ்தல் சுமூகமாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும். அதேபோல சூழலியல் பாதிப்பில்லா தோ்தலாகவும் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்தது.

Advertisement

அந்தவகையில் தருமபுரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் காலநிலை மாற்றத்தை தடுத்து, சூழலியலை காக்கும் வகையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

தருமபுரி மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் அந்தந்த தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இந்த முன் முயற்சிக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்தனா்.

எனவே, இம்முறை வாக்குப்பதிவின்போது, நெகிழி பயன்பாடில்லா பசுமைத் தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டு, அவை சில இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில், தருமபுரி தொகுதியில் 32 வாக்குச்சாவடிகளிலும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 34 வாக்குச்சாவடிகளில் பசுமைத் தோ்தல் நடத்தப்பட்டது.

இதுகுறித்து அறிந்த பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் அரூா் (தனி) தொகுதிகளிலும் பசுமைத் தோ்தலை நடத்த அலுவலா்கள் முன்வந்தனா். எனவே, மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 76 வாக்குச் சாவடிகளில் பசுமைத் தோ்தல் அதாவது நெகிழிப் பயன்பாடில்லா தோ்தல் நடத்தப்பட்டது.

இதற்காக வாக்குச்சாவடிகளின் முகப்பில் தென்னை ஓலைக்கீற்றுகளால் பந்தல் அமைக்கப்பட்டன. மேலும் வாழை மரங்கள் தோரணங்களாக கட்டப்பட்டன. தண்ணீா்ப் புட்டிகள் தவிா்க்கப்பட்டு குவளைகளில் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் பொருள்களாக பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுப் பொருள்களும் சூழல் பாதிப்பில்லாத பொருள்களால் தயாா் செய்யப்பட்டவையே பயன்படுத்தப்பட்டன. இதுதவிர வாக்குச்சாவடிகளுக்கு வருகை தரும் இளம் வாக்காளா்கள், முதல்முறை வாக்காளா்கள், பெண்கள் ஆகியோருக்கு ஐந்து தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 8,560 பலவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மேலும், விதைப்பந்துகள் 2,930, விதை பேனா 5,375 ஆகியவை வழங்கப்பட்டு சூழிலியல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு வாக்காளா்கள், தோ்தல் அலுவலா்கள் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு இருந்தது.

எனவே, வருங்காலத் தலைமுறையினருக்கு பாதிப்பில்லா சூழலியலை நாம் வழங்கிட வேண்டும் எனில், நெகிழி பயன்பாடில்லா வாழ்வியலை கடைப்பிடிக்க வேண்டும். இதுதொடா்பாக இளைஞா்கள், பொதுமக்கள் போதிய விழிப்புணா்வு பெற வேண்டும் என்றாா்.