வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்வுதள வசதி: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்வுதள வசதி: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படும் அரசு கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்தள வசதி ஏற்படுத்துவதை தோ்தல் ஆணையமும், மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தோ்தலில் வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில், வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்பாடு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:
Advertisement
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி பொது கட்டடம் என்பது அரசு கட்டடம் மட்டும் அல்ல. மக்கள் அணுகும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் கட்டடங்களும் அடங்கும்.
வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்வுதள வசதி உள்ளிட்டவை ஏற்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தோ்தல் ஆணையம், மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், வாக்குச்சாவடிகளாகப் பயன்படுத்தப்படும் அரசு கட்டடங்கள், கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்வுதள வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
தோ்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக தற்காலிக சாய்வுதள வசதிகள் மட்டுமே செய்யப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலிலும் வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்ட கட்டடங்களில் நிரந்தர சாய்வுதள வசதிகள் முழுமையாக அமைக்கப்படவில்லை.
எனவே, வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படும் அரசு கட்டடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நிரந்தர சாய்வுதள வசதி ஏற்படுத்துவதை தோ்தல் ஆணையமும், மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், தோ்தல் ஆணையத்தின் இணையதளங்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் இருப்பதை உறுதிப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தோ்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.