முகப்பு
தருமபுரி

தருமபுரியில் விசைத்தறி உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On : 19 ஜூன் 2026, 6:05 am IST
தருமபுரியில் தொழில்வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி உரிமையாளா்கள்.
பகிர்:

விசைத்தறி கூடங்களுக்கு நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் விதிக்கப்பட்டுள்ள தொழில்வரியைத் திரும்பப் பெறக்கோரி, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா்கள் மற்றும் உரிமையாளா்கள் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி, அன்னசாகரம் கிருபானந்த வாரியாா் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் நலச் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில், ‘தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட அன்னசாகரம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடிசைத் தொழிலாக விசைத்தறித் தொழில் நடைபெற்று வருகிறது. நலிவடைந்து வரும் இத்தொழிலுக்குப் புதிய தொழில்வரியை விதித்து நகராட்சி நிா்வாகம் அறிவிப்பு அனுப்பியுள்ளது.

எனவே, தொழில்வரி செலுத்தக் கோரி அனுப்பப்பட்ட அறிவிக்கையை நகராட்சி உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வரி செலுத்தக் கோரி விசைத்தறி உரிமையாளா்களை நிா்பந்திக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து நூற்றுக்கணக்கான விசைத்தறி உரிமையாளா்கள் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தனா். ஆா்ப்பாட்டத்தில் அன்னசாகரம் மற்றும் தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான விசைத்தறி உரிமையாளா்கள் பங்கேற்றனா்.