அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் 4,200 பேர் கைது
ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு
ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி, கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 4,220 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஊராட்சிச் செயலர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், வன பாதுகாவலர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2-ஆவது நாளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில், தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், ஒருங்கிணைப்பாளர்கள் எம். சுருளிநாதன், பி.எம்.கெளரன், பொன் ரத்தினம், பாஸ்கரன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலர் ஏ. சேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்பட 424 பேரை போலீஸார் கைது செய்தனர். பாலக்கோட்டில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, குணசேகரன், ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 137 பெண்கள் உள்பட 265 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காரிமங்கலத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் கே. புகழேந்தி, கூட்டமைப்பு நிர்வாகிகள் நாகராஜ், வைத்தியநாதன், புஷ்பலதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 163 பெண்கள் உள்பட 280 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, நல்லம்பள்ளியில் மறியலில் ஈடுபட்ட 166 பெண்கள் உள்பட 297 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 1,004 பெண்கள் உள்பட மொத்தம் 2,106 பேரை போலீஸார் கைது செய்தனர்.
52.34 சதவீதம் ஆசிரியர் பணிக்குச் செல்லவில்லை: தருமபுரி மாவட்டத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் என 4,929 பேர் பணிபுரிகின்றனர். இதில், வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி 2,096 பேர் மட்டும் பணி வந்திருந்தனர். மொத்தம் 52.34 சதவீதம் பேர் பணிக்குச் செல்லவில்லை.
அதேபோல தொடக்கக் கல்வியில் மொத்தம் 3,742 பேர் பணி புரிகின்றனர். இதில், 240 பேர் மட்டும் பணிக்குச் சென்றனர். 3,376 பேர் பணிக்குச் செல்லவில்லை. மொத்தம் 90.22 சதம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அதேபோல, வருவாய்த்துறையில் 774 பேரில் 410 பேரும், 87 அரசு கல்லூரி ஆசிரியர்களில் 52 பேரும், ஊரக வளர்ச்சித் துறையில் 20 சதவீதம் பேரும் பணியை புறக்கணித்துப் போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
பள்ளிகள் மூடப்படவில்லை: தருமபுரி மாவட்டத்தில், வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக எந்தப் பள்ளியும் மூடப்படவில்லை. பணிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் பரவலாக பிரித்து அனுப்பப்பட்டனர்.
மேலும், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை மூலம் அனைத்துப் பள்ளிகளும் செயல்பட்டன. தருமபுரி கல்வி மாவட்டத்தில் உள்ள காமலாபுரம் உயர்நிலைப் பள்ளி மூடப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை திறவுகோல்கள் ஒப்படைக்கப்பட்டன.
ஆனால், மாற்று ஏற்பாடுகள் மூலம் அந்தப் பள்ளியும் வழக்கம்போல புதன்கிழமை திறக்கப்பட்டன என மாவட்ட கல்வி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில்....
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்ட 2,114 ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது நாளாக அந்த கூட்டமைப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஒசூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 5 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அந்தக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாதப்பன், நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன், மாநில சட்டச் செயலாளர் நந்தகுமார், ஆசிரியர் முன்னேற்றக் கழக நிர்வாகி அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட423 பெண்கள் உள்பட 753 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 2,114 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
பள்ளிகளில் வகுப்பெடுத்த ஆசிரியர் பயிற்சி மாணவர்கள்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் மாவட்டத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதையொட்டி மாவட்டக் கல்வித்துறை சார்பில், மாற்று ஏற்பாடுகள் மூலம் பள்ளிகளை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவியர் மற்றும் 3 மாணவர்கள் என 18 பேர், தருமபுரி எஸ்.வி. சாலையிலுள்ள 4-ஆவது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி, அம்பலத்தாவடி, அப்பாவுநகர், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, வரகூர், உழவன்கொட்டாய், ஆயாமரத்துப்பட்டி, நரசிம்மபுரம் கோம்பை ஆகிய துவக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தனர்.