பிகார்: மகளிர் ரயில் பெட்டியில் ஆண் சடலம் கண்டெடுப்பு!
பிகாரில் மகளிர் ரயில் பெட்டியில் இருந்து ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரில் மகளிர் ரயில் பெட்டியில் இருந்து ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், தானாபூர் ரயில் நிலையத்தில் மகளிர் ரயில் பெட்டியில் இருந்து சனிக்கிழமை ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். புணே மற்றும் தானாபூருக்கு இடையே இயக்கப்படும் தானாபூர் சிறப்பு கட்டண ரயிலின் உள்ளே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
காலை சுமார் 11.30 மணியளவில் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்தது. பயணிகள் இறங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ஆய்வின்போது, மகளிர் பெட்டி ஒன்று உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பதை ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்தனர். ஊழியர்கள் அவசரகால வெளியேறும் ஜன்னலை உடைத்து பெட்டிக்குள் நுழைந்தனர்.
Advertisement
Advertisement
அப்போது கழுத்தில் பெல்ட் கட்டப்பட்ட நிலையில் பக்கவாட்டு கைப்பிடியில் தொங்கிக்கொண்டிருந்த ஆணின் சடலத்தைக் கண்டனர். பலியானவர் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர் என நம்பப்படுவதாகவும், அவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தானாபூர் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த தடயவியல் குழு, சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்திருக்கலாம். எனினும், இறந்தவரிடமிருந்து எந்த அடையாள ஆவணங்களும் மீட்கப்படவில்லை. சடலம் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தவும், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். இதனிடையே விசாரணையின் ஒரு பகுதியாக, தானாபூரை அடைவதற்கு முன்பு ரயில் நின்றிருந்த நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.