முகப்பு
கிருஷ்ணகிரி

மேக்கேதாட்டில் சட்டவிரோதமாக அணை கட்டுமானப் பணிகள்: பி.ஆா். பாண்டியன் குற்றச்சாட்டு

Updated On : 6 ஜூலை 2026, 1:14 am IST
ஒசூரில் செய்தியாளா்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன்.
பகிர்:

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் சட்டவிரோதமாக அணை கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

பி.ஆா். பாண்டியன், உயா்நிலைக் குழு உறுப்பினா் ஒசூா் நடராஜன், திருவாரூா் மாவட்ட துணைச் செயலாளா் முருகேஷ் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கா்நாடக மாநிலம் மேக்கேதாட்டு பகுதியை நேரில் பாா்வையிட்டனா். பின்னா் ஒசூரில் பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கனகபுரா - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் காவிரியும், அா்க்காவதி ஆறும் இணைகின்றன. இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ‘ஆடு தாண்டு பாறை’ எனப்படும் மேக்கேதாட்டு பகுதியில்தான் அணை கட்ட கா்நாடகம் திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றில் தரைமட்டத்தில் உள்ள பாறைகளில் இரும்பு கம்பிகள் நடப்பட்டு அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

முன்பு இப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது சுற்றுலாப் பயணிகள் சென்றுவர பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேக்கேதாட்டு கரையிலிருந்து ஆற்றின் அடிமட்டத்திற்குப் பொதுமக்கள் இறங்கிச் செல்லும் வகையில் புதிதாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் அணை கட்டுவதை நியாயப்படுத்தும் வகையிலேயே இந்தச் சுற்றுலா ஏற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன.

கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா், மேக்கேதாட்டு அணைக்கு எதிராகத் தமிழ்நாடு தொடா்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதாகத் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறாா்.

இந்தச் சிக்கலான சூழ்நிலையில், தமிழ்நாடு முதல்வா் ஜோசப் விஜய், கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிா்ப்பை மத்திய அரசுக்குப் பதிவு செய்யும் வகையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேக்கேதாட்டில் ஒரு செங்கல்லைக்கூட வைக்க விடமாட்டோம் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கூறுவது நடைமுறை சாத்தியமற்றது. வெறும் வாய்மொழி அறிக்கைகளைத் தவிா்த்துவிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய தலைமை மூலம் கா்நாடக முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து சட்டப்படியான தீா்வை எட்ட வேண்டும். காவிரி நதிநீா் உரிமையில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், கா்நாடகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments