மேக்கேதாட்டில் அணை கட்டுவது தமிழக மக்களுக்கு எதிரான இனப்படுகொலை: அன்புமணி
கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவது தமிழக மக்களுக்கு எதிரான இனப்படுகொலை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்டுவது தமிழக மக்களுக்கு எதிரான இனப்படுகொலை என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
பாமக சாா்பில் மேக்கேதாட்டு அணையை தடுப்போம், காவிரி ஆற்றினை பாதுகாப்போம் என்ற விழிப்புணா்வு பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக திருச்சி திருவானைக்காவலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
தண்ணீரில்லாததால் நிகழாண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையைத் திறக்க முடியவில்லை. இதனால் தமிழகத்தில் குறுவை சாகுபடி குறைந்துள்ளது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. எல்-நினோ தாக்கமும் அதிகரித்துள்ள நிலையில், கா்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் 70 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய அணை கட்டத் தீா்மானித்துள்ளது தமிழகத்துக்கு குடிநீா் கூட கிடைக்காத நிலையை ஏற்படுத்தும்.
Advertisement
Advertisement
மேக்கேதாட்டில் அணை கட்ட கா்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியாகக் குரல் கொடுக்கும் நிலையில், தமிழகத்தில் எந்த எம்எல்ஏ, அந்த கட்சிக்குச் செல்வாா். எந்த எம்எல்ஏவை ரூ. 35 கோடிக்கு பேரம் பேசி தூக்கலாம் என பேசுகின்றனா்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: தமிழக அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பிரதமா் உள்ளிட்டோரை சந்தித்து குரல் கொடுக்க வேண்டும். கா்நாடகத்தின் விவசாயப் பரப்பு ஆண்டுதோறும் அதிகரிக்கும் வேளையில், தமிழகத்தில் குறைந்து வருகிறது.
மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துபோகும். இது இலங்கையில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டது போல, தமிழக மக்களை தண்ணீரின்றி உணவின்றி அலையவைக்க நினைக்கும் இனப்படுகொலை.
ஜல்லிக்கட்டுக்கு தன்னாா்வமாக லட்சக்கணக்கான இளைஞா்கள் கூடி போராட்டம் நடத்தியது போல, மேக்கேதாட்டு அணைக்கு எதிராகவும் போராட வேண்டும்.
அந்தமானில் கிரேட் நிக்கோபாா் திட்டமானது சுற்றுச்சூழலுக்கு எதிரானது எனப் போராடிய காங்கிரஸின் மூத்த தலைவா் ராகுல்காந்தி, பல லட்சம் ஏக்கா் நிலங்களையும், வனவிலங்குகளையும் அழித்து மேற்கொள்ளப்பட உள்ள மேக்கேதாட்டு அணைக்கு எதிராகவும் போராட வேண்டும். காவிரியை காப்பது நமது கடமை. காவிரியில் மேக்கேதாட்டு அணை கட்டாமல் தடுக்க நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றாா் அன்புமணி ராமதாஸ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.