முகப்பு
நாமக்கல்

நாளை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி, வரும் வியாழக்கிழமை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:37 am IST
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி, வரும் வியாழக்கிழமை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், இருசக்கர வாகனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாநில பொதுச் செயலர் கே. சுந்தரம் தலைமை வகித்தார். இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை இனியும் தாமதிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும்.
 கடுமையான வறட்சி நிலவும் சூழலில் சிறு,குறு விவசாயிகள் எனப் பிரித்துப் பார்க்காமல் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் தள்ளுபடி தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவைத் திரும்ப பெற வேண்டும்.
 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன் மற்றும் விவசாயிகள் பெற்றுள்ள டிராக்டர் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 மேலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கை குறித்த மனுவை விவசாயிகள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
 முன்னதாக விவசாயிகள் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.