கயாக் படகில் 60 கி.மீ. கடற்பயணம்!
தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் கடல்வழியான 30 கி.மீ. தொலைவு பாக் நீர் சந்திப்பு எனப்படுகிறது.
தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் கடல்வழியான 30 கி.மீ. தொலைவு பாக் நீர் சந்திப்பு எனப்படுகிறது. இங்கிருந்து நீந்தி அங்கு சென்று, மீண்டும் திரும்பி 60 கி.மீ. நீந்தும் சாதனை அடிக்கடி நடைபெறுகிறது. இந்தத் தொலைவை அலைகள் நிறைந்த திறந்த கடலில், சிறிய துடுப்புப் படகான 'காயாக்'கில் கடப்பது அரிதாகும். பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ராணுவத்தினர் சிலர் கயாக் படகில் தனுஷ் கோடியிலிருந்து கிளம்பி, தலைமன்னாரைத் தொட்டு வந்திருக்கின்றனர்.
அடுத்தபடியாக 9 கயாக் துடுப்புப் படகில் 19 பேருடன் சென்று வந்து சாதனை படைத்திருக்கிறார் சென்னை நீலாங்கரையிலும், ராமேசுவரத்திலும் கடல் விளையாட்டுகள் பயிற்சிப் பள்ளியை நடத்திவரும் அரவிந்த் தருண்ஸ்ரீ.
அவர் கூறியது:
Advertisement
Advertisement
'கடந்த ஆண்டு நான் எனது மகள் தாரகையுடன் கயாக் படகில் தலைமன்னாருக்குச் சென்று வந்தேன். இந்த முறை கடலில் கழிவுகள் போடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 9 கயாக் படகுகளில் 19 பேர் சென்று வந்தோம்.
மே 20-ஆம் தேதி பிற்பகல் தனுஷ்கோடியிலிருந்து புறப்பட்டு மாலை தலைமன்னாரை அடைந்தோம். இரவில் பாதுகாப்புப் படகில் தங்கினோம். பின்னர், அதிகாலை ஐந்தரைக்குப் புறப்பட்டு மதியம் தனுஷ்கோடியை அடைந்தோம். திரும்பும்போது காற்று சாதகமாக இல்லை. அலைகளும் காற்றும் இலங்கையை நோக்கி அமைய, நாங்கள் எதிர் திசையில் படகை சிரமப்பட்டு துளாவி கரை சேர்ந்தோம்.
அப்பா - மகள் ஜோடி, அப்பா-மகன் ஜோடி, நண்பர்கள் ஜோடி என்று 12 முதல் 15 வயதில் சிறுமிகளும், 6 முதல் 14 வயது வரையுள்ள சிறுவர்களும் இந்தப் பயணத்தில் இருந்தனர். பெரிய துடுப்புப் படகில் 3 பேரும், சிறிய படகில் 2 பேரும் அமர்ந்தனர். தொடர்ந்து சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் துடுப்பு போட்டோம். பயணத்தின் இடையே பழச்சாறு, பழங்கள் சாப்பிட்டோம்.
பாதுகாப்புக்கு இலங்கை, இந்தியப் படைகள் இயந்திரப் படகுகளில் வந்திருந்தனர். குஜராத்தில் பிளாஸ்டிக் நுண்இழைகளால் செய்யப்படும் கயாக் படகின் விலை சுமார் ரூ.40 ஆயிரம். 9 துடுப்புப் படகுகளை சென்னையிலிருந்து ராமேசுவரத்துக்கு லாரியில் கொண்டுவந்தோம். அலைகள் நிறைந்த கடலில் சிறிய துடுப்புப் படகு சிறு துரும்பு மிதப்பது போன்றிருந்தது. பெரிய அலைகள் உள்ள திறந்தவெளி கடலில் சிறிய கயாக் படகில் பயணிப்பது சிலிர்ப்பை ஏற்படுத்தும் அனுபவமாக இருந்தது.
கடல்நீர் விளையாட்டுடன் தொடர்புடைய சுற்றுலாவை மேம்படுத்த கயாக் படகுப் போட்டிகளை இந்தப் பகுதிகளில் நடத்தலாம்'' என்கிறார் அரவிந்த் தருண்ஸ்ரீ.
-பிஸ்மி பரிணாமன்